YouTurn

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி எனப் பரவும் பழைய செய்தி!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி எனப் பரவும் பழைய செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலே மருத்துவம் படிக்க இடம் கிடைத்து விட்டது போன்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் மூலம் நீதி கிடைத்து விட்டது போலும் ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சிக்கப்படுகிறது.

பரவிய செய்தி

முதல் நரிக்குறவர் பெண் நீட்டில் தேர்ச்சி


X link

விரிவான விளக்கம்

இளங்கலை மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இத்தேர்வில் நரிக்குறவ மாணவி ஒருவர் தேர்ச்சி அடைந்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் பாஜகவினராலும் நீட் ஆதரவாளர்களாலும் பரப்பப்படுகிறது. 

அதில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த கோகிலா என்ற மாணவி நீட் தேர்வில் 161 மதிப்பெண் பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தகவலை ‘கதிர் செய்தியும்’ நியூஸ் கார்டாக வெளியிட்டுள்ளது.

உண்மை என்ன?

பரவக்கூடிய நாளிதழில் இந்த செய்தி ’ஜூன், 17ஆம் தேதி’ வெளியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், ’கடந்த 13ஆம் தேதி’  நீட் தேர்வு முடிவுகள் வெளியானதாக உள்ளது. ஆனால், இந்த ஆண்டு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன், 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதிலிருந்து இச்செய்தி இந்த ஆண்டு வெளியானது இல்லை என்பதை அறியமுடிகிறது. 


மேற்கொண்டு பரவக்கூடிய செய்தியில் உள்ள பெயர் மற்றும் இதர தகவல்களைக் கொண்டு தேடியதில், இது கடந்த ஆண்டு வெளியான செய்தி என்பதை அறியமுடிந்தது. 


இதுதொடர்பாக 2018ஆம் ஆண்டு, ஜூன் 18ஆம் தேதி அன்று ‘மாலை மலர்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் 161 மதிப்பெண் பெற்ற கோகிலா என்ற மாணவி பெரம்பலூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் படித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே இவர் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் வரமாட்டார். 


’நியூஸ் 18 தமிழ்நாடு’ யூடியூப் பக்கத்தில் 2023, ஜூன் 24ஆம் தேதி பணம் இல்லாததால் நரிக்குறவர் இன மாணவி மருத்துவர் ஆக முடியாத நிலை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசிய மாணவி: “நீட் தேர்வில் எனது மதிப்பெண் 161. நான் எடுத்துள்ள மதிப்பெண்ணுக்கு management quota-வில் மட்டுமே இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. எங்கள் வீட்டில் அவ்வளவு வசதி இல்லை”. என்கிறார்.



2023ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர் பட்டியலில் கோகிலா சமூகரீதியான தரவரிசையில் தமிழ்நாட்டளவில் 198-வது இடம் பிடித்துள்ளார். அந்த ஆண்டு  நீட் கட்-ஆஃப் குறித்து ஆய்வு செய்தோம். 



கடந்த ஆண்டு வெளியான நீட் தேர்வு முடிவை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ இடங்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்படும் இடங்கள், அதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் என்னவாக இருக்கும் என்பதை விளக்கி யூடியூபில் நீட் பயிற்சியாளர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த எண்ணிக்கை சற்று கூடவோ குறையவோ செய்யலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஏறத்தாழ தமிழ்நாட்டில் அரசு மற்றும் ESIC மருத்துவக் கல்லூரி சேர்த்து ஒட்டுமொத்தமாக 5,175 (5,050 + 125) இடங்கள் உள்ளன. இதில் 85 சதவிகிதம் (4,398 இடங்கள்) மாநில அரசு ஒதுக்கீடு, 15 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீடு. இதிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு போக மீதம் 92.5 சதவிகிதத்துக்கான (4,068) இடங்களே அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்படும். 


தமிழ்நாட்டில் பழங்குடியினருக்காக (ST) ஒரு சதவிகித இடம் (41 இடங்கள்) ஒதுக்கப்படுகிறது. அதன்படி ST சமூகத்துக்கான கட்-ஆஃப் 357-ஆக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோகிலா நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் 161. இம்மதிப்பெண்ணுக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்பதைத்தான் அம்மாணவியும் நியூஸ் 18 தமிழ்நாடு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை அவர் தனியார் கல்லூரியில் படிக்க முற்பட்டால் இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்கவேண்டும். 


நீட் தேர்வில் தேர்ச்சி பற்றிய அடிப்படை:


நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட்டால் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை சில ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றன. 


மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 107 முதல் 136 வரை மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுகிறது (இது அவ்வப்போது வேறுபடுகிறது). தேர்ச்சி அடைந்த நபர் மருத்துவம் படிக்கத் தகுதியானவராகக் கருதப்படுவார். அவர் அரசு கல்லூரியிலோ அல்லது தனியார் கல்லூரியிலோ மருத்துவம் படிக்கலாம்.


அரசு மருத்துவக் கல்லூரியை பொருத்தமட்டில், ஒட்டுமொத்தமாக உள்ள இடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் பிரித்து வழங்கப்படும். அந்தந்த பிரிவினருக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த (Top students) மாணவர்களுக்கு மட்டுமே இடங்கள் கிடைக்கும். மற்றபடி நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களிடம் பணம் இருப்பின் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்.


இவ்வாண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதியவர்களில் 56.41 சதவீதத்தினர் (13,16,268) தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து  89,426 (58.47%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துவிடுமா என்றால், அதுதான் இல்லை! 


தமிழ்நாட்டில் 11,650 (இரண்டாவது அதிக மருத்துவ இடங்கள் கொண்ட மாநிலம்) இளங்கலை மருத்துவப் படிப்பு இடங்கள் மட்டும்தான் உள்ளன. இதில் சுமார் 5,175 இடங்கள் அரசு கல்லூரிகளுடையது. மீதம் தனியார் கல்லூரிகளில் உள்ள சுமார் 6,000 இடங்களுக்கு தான் மீதமுள்ள 84,000 பேர் போட்டியிடுகின்றனர். இந்தப் போட்டியில் தனியார் கோச்சிங் நிறுனவங்கள்தான் லாபம் பார்க்கின்றன.


ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் ஒருவர் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துவிட்டது போன்றும் எளிய மக்களின் பிள்ளைகளுக்கு நீட் மூலம் நீதி கிடைத்துவிட்டது போன்றும் ஒரு பொய்யான தோற்றத்தைத் தொடர்ந்து உருவாக்க முயன்று வருகின்றனர். நீட் தேர்வினால் பணவசதி கொண்டவர்கள் மட்டுமே அதிகளவில் மருத்துவம் படிக்க மறைமுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்து அண்ணாமலை சொன்ன பொய்!


முடிவு:

நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதை இவ்வாண்டு வெளியான செய்திபோல் தவறாகப் பரப்புகின்றனர். அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையென அப்போதே செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் நீட்டில் தேர்ச்சி அடைந்தால் மட்டும் மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவம் பயில்வதாகப் பொருள் கிடையாது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க