யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜெர்மனியின் பல நகரங்கள், குறிப்பாக கடலோர நகரங்களில் பறவைகளால் ஏற்படும் தொல்லைகள் காரணமாக புறாக்கள், கடற்பறவைகள், நீர்ப்பறவைகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பறவைகளுக்கு உணவளிப்பதை தடை செய்துள்ளனர். இவற்றில் குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டுமே அடங்கும். ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த தடை விதிக்கப்படவில்லை.
பரவிய செய்தி
ஜெர்மனியில் அரசின் தடையை மீறி புறாவுக்கு உணவு போட்ட தமிழ்நாட்டு முதல்வர் ஜேர்மன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்டார்.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 30-ம் தேதி விமானத்தில் புறப்பட்ட அவர் ஜெர்மனியைச் சென்றடைந்தார்.
ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு, இங்கிலாந்துக்கு செல்லும் முதல்வர், அங்கும் முதலீட்டாளர்கள், தமிழ் மக்களை சந்திக்க உள்ளார். இந்நிலையில் ஜெர்மனியில் அரசின் தடையை மீறி புறாவுக்கு உணவு போட்ட முதல்வர் ஸ்டாலின் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் புறாக்களுக்கு உணவிடுவதை தெளிவாகக் காண முடிகிறது.
ஜெர்மனியின் மட்டுமல்ல ஐரோப்பாவில் பெரும்பாலான நகரங்களில் இப்படிப்பட்ட Bird Feeding ( don’t feed the birds ) என்ற எச்சரிக்கை வாசகங்களுடன் இருக்கின்றன இது போன்ற செயல்கள் சட்டத்திற்கு எதிரானவை. ( Environmental issue ) £100 வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது
நம் முதலமைச்சருடன்… pic.twitter.com/weh26dBjae
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகளில் குறிப்பிட்டுள்ளவாறு ஜெர்மன் நாட்டில் புறாக்களுக்கு உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ததில், ஜெர்மனியின் பல நகரங்கள், குறிப்பாக கடலோர நகரங்களில் பறவைகளால் ஏற்படும் தொல்லைகள் காரணமாக புறாக்கள், கடற்பறவைகள், நீர்ப்பறவைகள், வாத்து, மீன்கொத்திகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பறவைகளுக்கு உணவளிப்பதை தடை செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. குறிப்பாக இவற்றில் Hamburg, Stuttgart, Braunschweig, Munich, Cologne, Dortmund மற்றும் Frankfurt am Main போன்ற நகரங்கள் அடங்கும். மேலும் இதற்கு அபராதமாக 5000 யூரோக்கள் வரை வசூலிக்கப்படுகின்றன.
மேலும் முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனியில் எந்த நகரத்தில் புறாக்களுக்கு உணவளித்தார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன.

இந்நிலையில் ஜெர்மனியில் அரசின் தடையை மீறி புறாவுக்கு உணவு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டது போன்று பலரும் தவறான செய்தியை திரித்துப் பரப்பி வருகிறனர்.
முடிவு:
நம் தேடலில், ஜெர்மனியில் அரசின் தடையை மீறி புறாவுக்கு உணவு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை. ஜெர்மனியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த தடை விதிக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.