யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பேட்டியின் போது "கட்" என்று DD கூறியதற்கு தான், ஏ.ஆர்.ரஹ்மான் "கசாப்புக்கடையா நான் வெச்சுட்டிருக்கேன்" என்று கூறுகிறார். ஆனால், இதை ஊடகங்கள் தவறாக திரித்துப் பரப்பி வருகிறார்கள்.
பரவிய செய்தி
பெரிய பாயா? வேணாம் அது எனக்கு புடிக்கல.. சின்ன பாய், பெரிய பாய்-னு.. நான் என்ன கசாப்பு கடையா வெச்சிருக்கேன்? - ஏஆர்.ரஹ்மான்
விரிவான விளக்கம்
‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (டிடி) ஏ.ஆர்.ரஹ்மானை சமீபத்தில் பேட்டி எடுத்துள்ளார்.
அப்பேட்டியின் போது “என் பேரு பெரிய பாயா, நான் என்ன கசாப்புக் கடையா வெச்சிருக்கேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாகக் கூறி சன் நியூஸ், நியூஸ் 7 தமிழ், ஒன்இந்தியா தமிழ், ABP Nadu மற்றும் மின்னம்பலம் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். இதை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
“நான் என்ன கசாப்பு கடையா வச்சுருக்கேன்” – ‘பெரிய பாய்’ என தான் அழைக்கப்படுவது குறித்து ‘இசைப்புயல்’ கருத்து!
#BigBoy | #ARRahman | #musicalcomposer | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/SXnyRl47Hr
விவரம் : https://t.co/tEp0dTkQET
“பெரிய Bhai- ஆ?... நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன்” - A.R.ரஹ்மான்
#ReelTalk #ARRahman #TamilOneIndia pic.twitter.com/NCxXtnCGot
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் உண்மை தானா என்பதை அறிய, தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (டிடி), ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டியெடுத்த முழு வீடியோவை ஆய்வு செய்து பார்த்தோம்.
“Behindwoods TV” யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இதன் வீடியோவில் சரியாக 17:05 வது நிமிடத்தில், DD (திவ்யதர்ஷினி), இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம், உங்களை பெரிய பாய் என்று அனைவரும் அழைப்பதாகக் கூறியதும், ஏ.ஆர்.ரஹ்மான் “பெரிய பாயா.. வேணாம் எனக்குப் பிடிக்கல..” என்று கூறுகிறார்.
உடனே அதற்கு DD, “பிடிக்கலயா.. அப்ப கட்!” என்று கூறுகிறார். அதற்கு “என்ன ‘கட்’னா? கசாப்புக்கடையா வெச்சுட்டிருக்கேன்?” என்று கூறுகிறார். அதாவது கட் என்று DD கூறியதற்கு தான், அவர் கசாப்புக்கடையா வெச்சுட்டிருக்கேன்? கட்னு சொல்றீங்க என்ற அர்த்தத்தில் கூறுகிறார்.
ஆனால், இதை சன் நியூஸ், நியூஸ் 7 தமிழ், ஒன்இந்தியா தமிழ், ABP Nadu மற்றும் மின்னம்பலம் போன்ற ஊடகங்கள் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் தவறாக திரித்துப் பரப்பி வருகிறார்கள்.
முடிவு:
நம் தேடலில், “என் பேரு பெரிய பாயா, நான் என்ன கசாப்புக் கடையா வெச்சிருக்கேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாகக் கூறி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.