யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2024 அக்டோபரில் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கி.மீ வரை மாரத்தான் ஓடியுள்ளார்.
பரவிய செய்தி
“இந்தியாவிலேயே... மாரத்தானில் பங்கேற்று மூன்று கிலோ மீட்டர் வரை ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய்தான்; வேறு எந்த முதலமைச்சரும் ஓடியதில்லை; நம்ம முதலமைச்சர் போல் தமிழ்நாடும் ஆரோக்கியமாக மாறப்போகிறது” - அமைச்சர் ஆதல் அர்ஜுனா.

விரிவான விளக்கம்
இன்று (26/06/2026) சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ‘Start Run Stop Drugs' என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு 3 கி.மீ வரை ஓடினார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘இந்தியாவிலேயே மாரத்தானில் பங்கேற்று மூன்று கிலோ மீட்டர் வரை ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய்தான்; வேறு எந்த முதலமைச்சரும் ஓடியதில்லை' என்று குறிப்பிட்டார்.
“வேறு எந்த முதலமைச்சரும் ஓடியதில்லை!” #CMJosephVijay | #TVK | #TamilNews | #LatestNews | #AadhavArjuna pic.twitter.com/Ld4VbYpURL
தற்போது 🔔 : இதுவரைக்கும் இருந்த முதலமைச்சர் -லேயே மராத்தான் -ல ஓடுனது நம்ம அண்ணன் @TVKVijayHQ மட்டும் தான்
• காலைல 5 மணிக்கு எந்திரிச்சு நிகழ்ச்சிக்கு 6.10 க்கு எல்லாம் வந்துட்டாரு.. 6.15 -க்கு எல்லாம் ஓட ஆரம்பிச்சிட்டாரு...
• இந்தியாலயே இவர மாதிரி ஒரு யூத் முதலமைச்சர்… pic.twitter.com/OxLcvwI7FJ
உண்மை என்ன?
இந்தியாவில் முதலமைச்சர்கள் மாரத்தான் போட்டியில் ஓடியது குறித்து இணையத்தில் தேடினோம். ‘India Today’ ஆங்கில செய்தித்தளத்தில் வெளியாகி இருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

2024 அக்டோபர் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘காஷ்மீரில் நடந்த சர்வதேச மாரத்தான் போட்டியின் தொடக்க விழாவில் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா கலந்துகொண்டார். 13 நாடுகளில் இருந்து வந்த 2000 வீரர்களுடன் சேர்ந்து 54 வயதான முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கி.மீ வரை ஓடினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘Times of India’ செய்தித்தளமும் இதே செய்தியை வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது. ‘2024 அக்டோபர் மாதம் காஷ்மீரில் நடந்த சர்வதேச மாரத்தான் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஓமர் அப்துல்லா அரை மாரத்தான் என்று சொல்லக்கூடிய 21 கி.மீ வரை ஓடினார்’ என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு:
காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கி.மீ வரை மாரத்தான் ஓடியுள்ளார் என்பது தெரியாமல், 3 கி.மீ வரை மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டும் தான் என்று தவறான தகவலை கூறியுள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.