யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது ஹிந்தி தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்றாரா நடராஜன்?
பரவிய செய்தி
ஹிந்தி தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன்! முதல் முறையாக ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது ஹிந்தி தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன்; இளம் பருவத்திலேயே மாணவர்கள் பல மொழிகளை கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் மொழி தெரியாமல் கஷ்டப்படுவதை தவிர்க்கலாம். - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்.
X Link | Archive Link
விரிவான விளக்கம்
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன், ரஞ்சிக் கோப்பை மற்றும் டிஎன்பிஎல் அணிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் 2017ஆம் ஆண்டில் முதன்முதலாக 'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' ஐபிஎல் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டிலிருந்து 'SRH' ஐபிஎல் அணிக்காவும், 2020ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியிலும் பங்கேற்று சிறப்பாக விளையாடி வரும் அவர், கிராமத்தில் கிரிக்கெட் கனவோடு இருக்கின்ற இளைஞர்களுக்கு முறையான பயிற்சியும், வாழிகாட்டுதலும் கிடைக்கின்ற வகையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரியின் நிகழச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், “முதல் முறையாக ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது ஹிந்தி தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன், இளம் பருவத்திலேயே மாணவர்கள் பல மொழிகளை கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் மொழி தெரியாமல் கஷ்டப்படுவதை தவிர்க்கலாம்” என்று கூறியதாக சாணக்கியா, தினமலர், மாலைமுரசு மற்றும் ABP Nadu போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, சமூக ஊடகங்களில் பலரும் இந்த செய்திகளை வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.
ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன்#natarajan #IPL #Hindi https://t.co/y4W3uzOopr pic.twitter.com/3X2XgOixWD
— Dinamalar (@dinamalarweb) July 8, 2024
சரியோ, தவறோ மாணவப்பருவத்திலேயே இந்தி மொழி கற்றுக்கொள்ளுங்கள்; ஒரு மொழி தெரியாத காரணத்தினால் நாம் பிற்காலத்தில் கஷ்டப்படுவதை தவிர்க்கலாம் - கிரிக்கெட் வீரர் நடராஜன்@Natarajan_91 | #natarajan | #Hindi | #Cricket | #IPL | #NewsUpdates | #SportsUpdate | #malaimurasu pic.twitter.com/wi2j3nvi0k
— Malaimurasu TV (@MalaimurasuTv) July 8, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், சேலத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியுள்ள முழு வீடியோ ‘NewsTamil 24X7’ யூடியூப் பக்கத்தில் “LIVE : இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் பேச்சு | Natarajan Speech | Indian Cricketer | நேரலை” என்று குறிப்பிட்டு ஜூலை 08 அன்று வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
அதில் சரியாக 13:30 வது நிமிடத்தில், கல்லூரி மாணவர் ஒருவர், “ஐபிஎல்-ல் முதலில் உங்களை ஏலத்துக்கு எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. உள்ளே முதல்முறை சென்றபோது உங்களுடைய அனுபவம் ஆடுகளத்தில் (Ground Experience) எப்படி இருந்தது?" என்று கேட்கிறார்.
அதற்கு பதிலளித்து பேசிய கிரிக்கெட் வீரர் நடராஜன், “இப்போது (உங்களுக்கு முன்னாடி ) ஒருத்தர் பேசும்போது சொன்னாரு பார்த்தீங்களா? “எனக்கு என்ன பேசணும்னு தெரியல பதட்டமாக (Nervous) இருக்குன்னு”, எனக்கெல்லாம் அப்போ பேச்சுக் கூட வராது. தமிழ் தவிர எனக்கு எதுவும் தெரியாது. முழுவதுமே அங்கு ஹிந்தி தான். அங்கு ஸ்ரீதர் சார் என்று ஒருத்தர், முன்னாள் Fielding Coach இந்திய அணிக்காக விளையாடியவர். அவருக்கு தமிழ் தெரியும். அவர்தான் எனக்கு எதுவாக இருந்தாலும் Communicate பண்ணுவார். ரொம்ப கஷ்டமாக இருந்தது.
ஆனால் அந்த கஷ்டங்களை பார்க்காமல், எனக்கு விளையாட ரொம்ப பிடிக்கும். என்னோட விஷயத்தை நான் பண்ணிக்கொண்டு இருப்பேன். ஆனால் நான் கஷ்டப்பட்டு நம்மால் முடியாது என்று பின்னாடி இருந்திருந்தால் வேலைக்கு ஆகிருக்காது. ஆனால் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன். சொல்லப்போனால் ஒருமாதிரி தனியாக இருப்பதைப்போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போதெல்லாம், நான் சொன்னதுபோல, நமக்கு நல்ல குணங்கள் இருந்தால், நாம் எங்கு இருந்தாலும் சில பேர் உதவி செய்வார்கள் என்று. ஸ்ரீதர் சார், சேவாக் சார் நிறைய உதவி செய்தார்கள்.
ஆனால் ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தது. அதற்குதான் சொன்னேன் இங்குஇருந்தே பேச ஆரம்பித்துவிடுங்கள். சரியோ தவறோ, பின்னாடி உங்களுக்கு எளிமையாக இருக்கும். ஏனென்றால் எந்த தன்னம்பிக்கை வந்துவிட்டால் தவறோ சரியோ பேசிவிடலாம். அதற்கு பின்புதான் 2018ஆம் ஆண்டு SRH அணிக்கு விளையாடும்போது நிறைய பேச ஆரம்பித்தேன். அதேமாதிரி நிறைய கல்லூரிகள், பள்ளிகள் சென்று என்னுடைய அனுபங்களைக் கூற ஆரம்பித்தேன். என்னை மாதிரி நிறைய பேர் வரவேண்டும் என்பதற்காகத்தான் பேசுகிறேன். இந்த மாதிரி விஷயங்களில் நான் கஷ்டப்பட்டதுபோல, என்னை மாதிரி யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான், நிறைய விஷங்களை அவர்களுக்கு சொல்வேன். நான் நகரங்களுக்கு அதிகமாக சென்றதே இல்லை. கிராமங்களில்தான் இருந்துள்ளேன். என்னை மாதிரி நிறைய பேர் வரவேண்டும். நம் பேசுதிறன் (Communication) போய்விடக்கூடாது அதனால் இங்கிருந்தே கற்றுக்கொள்ளுங்கள்” என்று நடராஜன் பேசியுள்ளார்.
ஆனால் இங்கே, எந்த இடத்திலுமே, "இளம் பருவத்திலேயே மாணவர்கள் பல மொழிகளை கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் மொழி தெரியாமல் கஷ்டப்படுவதை தவிர்க்கலாம்" என்று அவர் கூறவில்லை.
மேற்கண்ட பத்தியில் நடராஜன் பேசியதை நன்கு கவனித்தால், பேசுதிறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையே மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளதை தெளிவாகக் காணமுடிகிறது.
ஆனால் நடராஜன் இளம் பருவத்திலேயே மாணவர்கள் ஹிந்தி போன்ற பல மொழிகளை கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் மொழி தெரியாமல் கஷ்டப்படுவதை தவிர்க்கலாம் என்று மாணவர்களிடம் கூறியதாகவும், அவர் ஹிந்தி தெரியாத ஒரே காரணத்தினால் மட்டுமே பஞ்சாப் அணியில் கஷ்டப்பட்டார் என்பது போன்றும் ஊடகங்கள் பலவும் தவறாகத் திரித்து செய்தி வெளியிட்டுள்ளன.
முடிவு:
நம் தேடலில், மொழி தெரியாமல் கஷ்டப்படுவதை தடுக்க ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளைக் கற்கவேண்டும் என்று நடராஜன் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.