யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த சம்பவத்தில் மரணமடைந்த லால் சந்த, ஒரு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை பெயர் முகமது அய்யூப் அலி மற்றும் அவரது தாயார் பெயர் அலேயா பேகம். இந்நிலையில் வங்கதேசத்தில் மீண்டும் இந்துக்கள் மீது வெறிச்செயல் என்று கூறி தினமலர், சமயம் மற்றும் தினத்தந்தி போன்ற ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சமீபத்தில் வங்கதேசத்தின் டாக்காவில் அமைந்துள்ள மிட்ஃபோர்டு மருத்துவமனைக்கு அருகில் வியாபாரி ஒருவர், ஒரு கும்பலால் கான்கிரீட் கற்களால் அடித்து கொலை செய்யப்பட்டு, அவர் உயிரிழந்து விட்டார் என உறுதி செய்ததும், அவரது உடல் மீதும் அந்த கும்பல் நடனம் ஆடி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய நிலையில், இது வங்கதேசத்தில் மீண்டும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் இந்துக்கள் மீது தாக்குதல் என்று கூறி தினமலர், சமயம் மற்றும் தினத்தந்தி போன்ற ஊடகங்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், வங்கதேசத்தின் டாக்காவில் அமைந்துள்ள மிட்ஃபோர்டு மருத்துவமனைக்கு அருகில் இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வியாபாரியின் பெயர், லால் சந்த் (எ) எம்.டி. சோஹாக் என்பதை அறிய முடிந்தது. மேலும் இவர் ஒரு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை பெயர் முகமது அய்யூப் அலி மற்றும் அவரது தாயார் பெயர் அலேயா பேகம் என்பதை “Dhaka Tribune“ ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் உறுதிபடுத்த முடிகிறது.
மேலும் இதில், "இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் ஏழு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சோஹாக் அவரது சொந்த கிராமமான பந்தர்காச்சியா, வார்டு 7, தலுவா யூனியன், பர்குனா சதர் உபாசிலாவில் அவரது தாயின் கல்லறைக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் இந்துக்கள் மீது தாக்குதல் என்று கூறி தினமலர், சமயம் மற்றும் தினத்தந்தி போன்ற ஊடகங்கள் உட்பட வலதுசாரிகள் பலரும் சமூக ஊடகங்களில் தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், வங்கதேசத்தில் மீண்டும் இந்துக்கள் மீது தாக்குதல் என்று கூறி தினமலர், சமயம் மற்றும் தினத்தந்தி போன்ற ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறாக திரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.
