யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப் படத்தில் இருப்பது, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே மோர்டாசாவின் வீடு.
பரவிய செய்தி
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் இந்து என்பதால் வீட்டில் தீ யை வைத்த இஸ்லாமியர்கள். திருந்துங்கடா நாளைக்கு நமக்கும் இந்நிலைமை தானா? இந்தியாவில இந்துக்கள் பெரும்பான்மையா இருக்கும்வரைதான் மதசார்ப்பற்ற நாடு என்று சொல்வார்கள் சிறுபான்மையினர். எப்போது அவர்கள் பெரும்பான்மை ஆகிட்டோம் என்று நினைக்கிறார்களோ அப்பவே இந்த நாட்டை அவர்களின் மதம் சார்ந்த நாடா மாற்றிவிடுவார்கள். அவ்வளோ மதவெறி அவர்களுக்கு..! அவர்கள் இரத்தத்திலையே மதவெறி எந்தளவுக்கு ஊறிப்போய் இருக்கிறது என்பதை இந்த காட்சி நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 04) ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 91 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு இன்னும் பதற்றநிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வீட்டுக்கு இஸ்லாமியர்கள் தீ வைத்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Bangladeshi Hindu cricketer Liton Das house has been set on fire pic.twitter.com/0so4MS1Chp
— Hindutva Knight (@HPhobiaWatch) August 5, 2024
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்தததில், வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் இந்து என்பதால் அவருடைய வீட்டுக்கு இஸ்லாமியர்கள் தீ வைத்ததாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், பரவி வரும் புகைப் படத்தில் இருப்பது, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே பின் மோர்டாசாவின் (Mashrafe Bin Mortaza) வீடு என்பதையும் அறியமுடிந்தது.
வங்கதேசத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு, தொடர்ந்து இரண்டாவது முறை எம்.பியாக மஷ்ரஃபே பின் மோர்டாசா தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளரான அவருடைய வீட்டுக்கு போராட்டக்காரர்கள் நெருப்பு வைத்துள்ளனர். மாவட்ட பரிஷத் தலைவர் வக்கீல் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மாவட்ட அவாமி லீக் பொதுச்செயலாளர் நிஜாம் உதீன் கான் நிலு ஆகியோரின் வீடுகளையும் அவர்கள் தீ வைத்து எரித்தனர் என்பதை ‘Tbs News’ தனது பக்கத்தில் “மஷ்ரஃபின் நரைல் வீடு இடிக்கப்பட்டு, தீவைக்கப்பட்டது” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் மூலம் அறியமுடிந்தது. மேலும் அதில் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் வீட்டின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதையும் தெளிவாகக் காணமுடிகிறது.

இதே போன்று ‘Dhaka Tribune‘ ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நரைல்-2 தொகுதியின் எம்.பி.யான மஷ்ரஃபே பின் மோர்டாசாவின் வீட்டைத் தீ வைத்து எரித்தனர்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதிலும் பரவி வரும் புகைப்படத்தில் உள்ள வீட்டின் முன்புறம் காட்டப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் மஷ்ரஃபே பின் மோர்டாசாவின் வீடு எரிக்கப்பட்டதை, கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடு எரிக்கப்பட்டதாகக் கூறி வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக சிலர் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், இந்து மதத்தைச் சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டுக்கு தீ வைத்த இஸ்லாமியர்கள் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
