யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தந்திடிவி, தினமலர் ஊடகங்கள் உட்பட பலரும் “அவரின் அழகு பிறரின் கவனத்தை சிதறடிப்பதால் தான் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்” என்று கூறி தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
"அழகா இருக்கது குத்தமா?", “இவரின் அழகு பிறரின் கவனத்தை சிதறடிக்கிறது'' என திருப்பி அனுப்பப்பட்ட ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை. இதனால் ஓய்வை அறிவித்து ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிய லுவானா அலோன்சா - தந்தி டிவி
விரிவான விளக்கம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 35 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 103 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. சீனா 73 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சாவின் அழகு பிறரின் கவனத்தை சிதறடிப்பதால் ஒலிம்பிக் போட்டியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறி தந்தி டிவி, தினமலர், புதியதலைமுறை ஊடகங்கள் உட்பட பலவும் தங்களது பக்கங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர். இதனை பலரும் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது!
— Dinamalar (@dinamalarweb) August 9, 2024
#Olympics | #Paris2024 | #ParisOlympics2024 | #OlympicGames | #LuanaAlonso | #ParaguayanSwimmerhttps://t.co/y4W3uzOopr pic.twitter.com/yuST5MHuvn

உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வுசெய்து பார்த்ததில், ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சாவின் அழகு பிறரின் கவனத்தை சிதறடிப்பதால் ஒலிம்பிக் போட்டியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிந்தது.
பிரிட்டன் ஊடகமான ‘The Sun’ இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், பராகுவே நாட்டைச் சேர்ந்தவர் நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சா, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், பெண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கான தகுதியை வெறும் 0.24 வினாடிகளில் தவறவிட்டதால், ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் ஒலிம்பிக் நடைபெறும் இடத்தில் இருந்து கொண்டு, தனது நாட்டு அணி வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக, அவர் டிஸ்னிலேண்டிற்குச் சென்றதால், அவரது இருப்பு பராகுவே அணிக்குள் பொருத்தமற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது என்று கூறி சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று பராகுவே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அறிந்துகொள்ள முடிகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று ‘Nypost’ இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியிலும், “20 வயதான அலோன்சோ ஒரு பொருத்தமற்ற சூழலை உருவாக்கியதற்காக ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். இதற்கு அவருடைய டிஸ்னிலேண்டு பயணம் தான் காரணம் என்று கூறப்படுகிறது மற்றும் தன்னுடைய அணி ஆடைகளுக்குப் பதிலாக மெல்லிய ஆடைகளை அணிந்ததும் காரணம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் அவர் டிஸ்னிலேண்டு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்மூலம், தந்திடிவி, தினமலர் ஊடகங்கள் உட்பட பலரும் “ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சாவின் அழகு பிறரின் கவனத்தை சிதறடிப்பதால்தான் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்” என்று கூறி தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், “ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சாவின் அழகு பிறரின் கவனத்தை சிதறடிப்பதால்தான் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்” என்று கூறி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.
