யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திருவாட்சி மண்டபத்தின் கீழ்புறம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் வசந்த மண்டபம் வாசல் அருகே அமைந்துள்ளது தலமரம்.
பரவிய செய்தி
”திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் ஸ்தல விருட்சம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகில் உள்ளது. அதில் முஸ்லிம்கள் கொடியேற்றுகிறார்கள்” - எச். ராஜா.

விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றம் வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் சர்ச்சை செய்து வருகின்றனர். இந்நிலையில், மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவிற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, “1931ஆம் ஆண்டு லண்டன் ஃப்ரிவி கவுன்சில் (Privy Council) மதுரை கீழமை நீதிமன்றம் 1923ஆம் ஆண்டு கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது. அந்த தீர்ப்பின் படி, முஸ்லிம்கள் உரிமை கொண்டாடும் தர்காவின் கட்டிடம் அது இருக்கும் 33 செண்ட் நிலம் மட்டும்தான் அவர்களுக்கு உரிமையானது. மலையில் மீதி இருக்கும் அனைத்து பகுதிகளும் கோவிலுக்கு சொந்தமானது” என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார். மேலும், “சிக்கந்தர் தர்கா இருக்கும் அந்த 33 செண்ட் நிலத்திற்கு வெளியில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரம் இருக்கிறது. அந்த மரத்தில் முஸ்லிம்கள் கொடியேற்றுகிறார்கள்” என்றும் எச். ராஜா பேசியுள்ளார்.
உண்மை என்ன?
முதலில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தல விருட்சம் குறித்து தேடினோம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் தல வரலாறு குறித்த நூல் ஒன்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளதை கண்டோம்.

அதன்படி, காட்டை அழித்து வேளாண்மை செய்ததால் நகரங்கள் உருவானது. அந்நகரங்களில் தெய்வங்களுக்குப் பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்ட கோவிலுக்கு அருகில் ஆதியிலிருந்து இருந்த மரத்தை அழிக்காமல் விட்டுவைத்தனர். அந்த ஆதிமரம் தான் அக்கோவிலின் தலமரம் அல்லது தல விருட்சம் என்று என்று அழைக்கப்படுகிறது.
அந்தவகையில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தலமரம் கல்லத்தி என்ற வகையைச் சேர்ந்த மரமாகும். அந்த மரம் திருவாட்சி மண்டபத்தின் கீழ்புறம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் வசந்த மண்டபம் வாசல் அருகே அமைந்துள்ளதாக இந்நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தலமரம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் இருப்பதாக எச். ராஜா பேசியிருப்பது பொய்யான தகவல் என்பது அம்பலமாகிறது.
அதேபோல் லண்டன் ஃப்ரிவி கவுன்சில் (Privy Council) தீர்ப்பை முன்வைத்து திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே முருகன் கோவிலுக்குதான் சொந்தம் என்று ஏற்கனவே எச்.ராஜா பரப்பிய பொய்யை நமது ‘You Turn’ அம்பலப்படுத்தியுள்ளது.

அதாவது மதுரை கீழமை நீதிமன்றம் 1923ஆம் ஆண்டு கொடுத்த தீர்ப்பை லண்டன் ஃப்ரிவி கவுன்சில் உறுதி செய்தது என்பது உண்மைதான். ஆனால் அந்த தீர்ப்பில் ”மசூதி உள்ள இடம், சாகுபடி செய்யப்பட்ட இடம், குறிப்பிட்ட சில இடம், மசூதிக்கு செல்லும் பாதை ஆகியவை தவிர முழு மலையும் கோவிலுக்குச் சொந்தம்” என்று குறிப்படப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மறைத்து, தர்காவின் கட்டிடம் அது இருக்கும் 33 செண்ட் நிலம் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்று எச்.ராஜா பொய்யான தகவலை பரப்பிவருகிறார்.
முடிவு:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகில் முருகன் கோவிலின் தலமரம் இருப்பதாகவும் அதில் முஸ்லிம்கள் கொடி ஏற்றுவதாகவும் பொய்யான தகவலை எச்.ராஜா பரப்பிவருகிறார்.