யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குழந்தைகளின் பெயருக்கு பின்னால் சாதியை சேர்த்து எழுதும் வழக்கம் தமிழ்நாட்டில் எப்போதும் இல்லை. அமைச்சர் செங்கோட்டையன்யின் சர்ச்சை பேச்சு தொடர்ந்து இவ்வாறான தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
”பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி பெயர் சேர்க்கப்படுவது கட்டாயமில்லை என்று அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. இதனை விஜய் தலைமையிலான தவெக அரசு செய்திருக்கிறது” - ’Karnataka Times’

விரிவான விளக்கம்
’மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் மாணவர்களின் சாதிப் பெயர் சேர்ப்பது கட்டாயமில்லை என்று அறிவித்ததில் இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது’ என்று ’Karnataka Times’ என்ற ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
முதலில், குழந்தைகளின் பெயருக்கு பின்னால் சாதியை சேர்த்து எழுதும் வழக்கம் தமிழ்நாட்டில் எப்போதும் இல்லை. பள்ளி அடையாள அட்டையிலும் சாதி பெயர் குறிப்பிடப்படுவதில்லை.

கடந்த ஜூன் 26ஆம் தேதியன்று கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறும்’ என்று பேசினார். இது சர்ச்சையானது.

இந்த சர்ச்சை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ’வருவாய்த் துறை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளிலேயே சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான அடையாள அட்டையின் வடிவமைப்பு, அதில் இடம்பெறும் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பள்ளிக் கல்வித் துறையின் முடிவுக்கு உட்பட்டவையாகும். மாணவர்களின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக எதிர்காலத்தில் ஏதேனும் மின்னணு தகவல் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், சாதி போன்ற விவரங்கள் ‘QR code’ முறையில் மட்டுமே அணுகக்கூடிய வகையில் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக’ கூறிப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளாமல், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் இதுவரை சாதிப் பெயர் இடம் பெற்றிருந்ததாகவும், இவ்வாறு சாதிப் பெயர் இடம்பெறுவதை தவெக அரசு தற்போது ஒழித்திருப்பதாகவும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு:
பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி பெயர் சேர்க்கப்படுவது கட்டாயமில்லை என்று தவெக அரசு தற்போது அறிவித்திருப்பதாக தவறான செய்தியை வெளியிட்டுள்ளது ’Karnataka Times’ ஊடகம்.