யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஒன்றிய அரசின் ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் பல மாநிலங்களில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகங்கள் மின்சார பேருந்துகளை வாங்கி வருகின்றன.
பரவிய செய்தி
“இப்போது மின்சார பேருந்துகளை எந்த மாநிலங்களும் வாங்குவதில்லை. இதுவரை வாங்கி வந்த மும்பை மாநகரமும் அதை வாங்குவதை நிறுத்திவிட்டது. தற்போது தமிழ்நாடு மட்டுமே மின்சார பேருந்துகளை வாங்கி வருகிறது”
விரிவான விளக்கம்
உலகம் முழுவதும் உள்ள நகரங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கணக்கில் கொண்டு டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றன. அதுபோல் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பிலும் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2025 டிசம்பர் மாதம் இரண்டாம் கட்டமாக 600 மின்சார பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் முடிவானது.
இந்நிலையில், “குறைவான இருக்கையில் இருப்பது, நிற்பதற்கும் குறைவான இடம் மட்டுமே இருப்பது, மழைக்காலத்தில் என்ஜின் பழுது ஆவது, சென்சாரில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய திறன்மிக்க தொழிலாளர்கள் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் பல மாநிலங்கள் மின்சார பேருந்துகளை வாங்குவதில்லை. ஏற்கனவே வாங்கி வந்த மும்பை மாநகரமும் அதை நிறுத்திவிட்டது. தற்போது தமிழ்நாடு அரசு மட்டுமே மின்சார பேருந்துகளை வாங்கி வருகிறது” என்று பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
தமிழ்நாடு தவிர்த்து பிற இந்திய மாநிலங்களில் மின்சார பேருந்துகள் வாங்கப்படுவது குறித்து இணையத்தில் தேடினோம். ‘Mumbai Mirror’ வெளியிட்டுள்ள செய்தியின் படி, கடந்த 2025 அக்டோபர் மாதம் 150 மின்சார பேருந்துகளை புதிதாக கொண்டு வந்ததன் மூலமாக மொத்தம் 1269 மின்சார பேருந்துகள் 16 பணிமனைகளிலிருந்து மும்பை நகரில் இயக்கப்படுவதாக தெரியவருகிறது.

அதுமட்டுமின்றி வரும் 2027ஆம் ஆண்டிற்குள் மும்பையில் 8000 மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் முன்னேற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது மும்பை பொது போக்குவரத்து நிறுவனம்.

அதேபோல், ஒன்றிய அரசின் ‘PM E-DRIVE’ என்ற மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான திட்டத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் பேருந்துகளை வாங்கியுள்ளது. முதல் கட்டமாக 4500 மின்சார பேருந்துகளும் இரண்டாம் கட்டமாக 1221 மின்சார பேருந்துகளும் கர்நாடகாவின் ‘பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்’ வாங்கியுள்ளது.
‘PM E-DRIVE’ திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு 14,028 மின்சார பேருந்துகளை, முதல்கட்டமாக 40 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட 9 நகரங்களுக்கு ஒதுக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது. இதற்காக ’Convergence Energy Services Limited (CESL)’ என்ற நிறுவனத்தை ஒன்றிய அரசு அமைந்துள்ளது. இதன் கீழ் மாநிலங்கள் மொத்தமாக மின்சார பேருந்துகளை வாங்கலாம்.

ஆனால் இந்த மின்சார பேருந்துகளின் கொள்முதல், பராமரிப்பு, செயல்பாடு ஆகியவை தனியார் நிறுவனத்தின் கீழ் தான் இருக்கும். மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் அல்ல. இது போக்குவரத்து துறையில் தனியார்மயத்தை படிப்படியாக நுழைக்கும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் நியாயமான அச்சத்தை தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, தமிழ்நாட்டின் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மட்டுமல்ல ஒன்றிய அரசின் ஊக்குவிப்பின் மூலம் பல மாநிலங்களில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகங்கள் மின்சார பேருந்துகளை வாங்கி வருகின்றன என்பது தெரியவருகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் சென்னை போக்குவரத்துக் கழகம் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் மின்சார பேருந்து வழங்கப்படுவதில்லை என்று சொல்லப்படுவது தவறான தகவலாகும்.