யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ 7 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
டேங்கர் கப்பல் கைப்பற்றப்பட்டதற்குப் பதிலடியாக, ரஷ்யா அமெரிக்காவை ஏவுகணைத் தாக்குதல் மூலம் அச்சுறுத்துகிறது.

விரிவான விளக்கம்
கடந்த ஜனவரி 15ஆம் தேதி, அமெரிக்க இராணுவம் கரீபியன் கடலில் இருந்த எண்ணெய் கப்பலை சிறைபிடித்துள்ளது. வெனிசுலா அதிபர் நிக்லோலஸ் மதுரோ அமெரிக்க இராணுவத்தால் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமான முறையில் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், அமெரிக்கா சிறை பிடித்திருக்கும் நான்காவது எண்ணெய் கப்பலாகும் இது. இவ்வாறு வெனிசுலா எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இருப்பது, ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடலில் இருந்து ஏவுகணை ஏவப்படும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ’எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றப்பட்டதற்குப் பதிலடியாக ரஷ்யா அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக’ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’WION News’ என்ற செய்தித்தளத்தின் யூடியூப் பக்கத்தில் ஒரு செய்தியை காணமுடிந்தது. 2018 மே மாதம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், ’ரஷ்யா 4 கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ’Voice of America’ என்ற யூடியூப் தளத்தில் 2018 மே மாதம் வெளியிடப்பட்டிருந்த செய்தி வீடியோவில், ’ரஷ்யாவின் அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்முழ்கி கப்பல் மூலமாக 4 கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்றும் அது தொடர்பான வீடியோ காட்சிகளை ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகமே வெளியிட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, ஏவுகணை ஏவப்படும் இந்த வீடியோ 7 ஆண்டுகள் பழைய வீடியோ என்பதும் 2018ஆம் ஆண்டில் ரஷ்யா ஏவுகணை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.
முடிவு:
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யா ஏவுகணை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.