யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
போராட்டத்தில் இஸ்லாமிய கொடியை மட்டுமல்ல, இந்து, பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட கிறிஸ்துவம் அல்லாத பிற மதக்கொடிகளையும் சேதப்பட்டுத்தியுள்ளனர்.
பரவிய செய்தி
நியூசிலாந்தில், பூர்வீக மாவோரி இனத்தவர்கள் #இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிராகப் போராடி, ஜிஹாதிக் கொடியை அழிக்கின்றனர்.
“நியூசிலாந்து கிறிஸ்தவ நாடு, அமைதி மார்க்கம் அங்கு வரவேற்கப்படுவதில்லை!”

விரிவான விளக்கம்
நியூசிலாந்தில் போராட்டக்காரர்கள் சாலையில் திரண்டு பழங்குடிகளின் பாரம்பரிய காக்ஹா நடனம் ஆடி, இஸ்லாமிய கொடி ஒன்றை கிழிப்பதைக் காட்சிபடுத்தும் சிறிய வீடியோவை பதிவிட்டு, ‘நியூசிலாந்தில் பூர்வீக மாவோரி இனத்தவர்கள் இஸ்லாமியர்களின் குடியேற்றத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக’ பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
நியூசிலாந்தில், பூர்வீக மாவோரி இனத்தவர்கள் #இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிராகப் போராடி, ஜிஹாதிக் கொடியை அழிக்கின்றனர்.
“நியூசிலாந்து கிறிஸ்தவ நாடு, அமைதி மார்க்கம் அங்கு வரவேற்கப்படுவதில்லை!”
pic.twitter.com/oey5TR6hJJ
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’THE ECONOMIC TIMES’ செய்தித்தளத்தில் இது குறித்து ஒரு செய்தியைக் காணமுடிந்தது.

2025 ஜூன் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ’டெஸ்டினி சர்ச்’ என்ற அமைப்பைச் சேர்ந்த பிரையன் டமாகி என்பவர் நியூசிலாந்தின் மத்திய ஆக்லாந்தில் உள்ள குயின் தெருவில் கிறிஸ்துவம் அல்லாத மதத்தினர் நியூசிலாந்தில் குடியேறுவதை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளார். அதில் இந்து, பௌத்தம், இஸ்லாம், சீக்கியம் ஆகிய மதங்களின் கொடிகளை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, மேலும் தேடியபோது, ’State craft’ என்ற யூடியூப் தளத்தில் 2025 ஜூன் மாதம் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள் இந்த போராட்டத்தில் ’இந்து மதக்கொடியும்’ ‘சீக்கிய மதக்கொடியும்’ கிழிக்கப்பட்டதைக் காணமுடிகிறது.
இதுகுறித்து ’India Today’ செய்தித்தளமும் நியூசிலாந்தின் இந்த போராட்டத்தில் இந்து, பௌத்த மதக் கொடிகள் சேதப்படுத்தப்பட்டதை பதிவு செய்துள்ளது.

நியூசிலாந்தின் அதிகாரப்பூர்வ மதம் கிறிஸ்துவம் தான் என்று கூறி, இந்த ’டெஸ்டினி சர்ச்’ அமைப்பினர் பிற மதக் கொடிகளை கிழித்ததை மத சகிப்பின்மை என்றும் வெறுப்பை பரப்பும் வகையில் இது இருக்கிறது என்றும் நியூசிலாந்தின் பெரும்பாலான மக்கள் கருதுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
’டெஸ்டினி சர்ச்’ அமைப்பினரின் இந்த வெறுப்பை விதைக்கும் போராட்டத்தை நியூசிலாந்தின் கிறிஸ்த்துவ திருச்சபை தலைவர்கள் கூட கண்டித்திருக்கிறார்கள். அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, நியூசிலாந்தில் அந்த போராட்டத்தில் இஸ்லாமிய கொடியை மட்டுமல்ல, இந்து, பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட கிறிஸ்துவம் அல்லாத பிற மதக்கொடிகளையும் சேதப்பட்டுத்தி மத வெறுப்பை விதைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.
முடிவு:
இந்தப் போராட்டத்தில் மத வெறுப்பை விதைக்கும் வகையில் கிறிஸ்துவம் அல்லாத பிற மதக்கொடிகளை கிழித்துள்ளதை மறைத்து, இஸ்லாம் மதத்திற்கு எதிராக மட்டுமே போராட்டம் நடத்தப்பட்டதாக பாஜகவினர் தவறாக பரப்பிவருகிறார்கள்.