யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மேற்கண்ட எந்த வழக்குகளையும் முஸ்லீம் அமைப்புகளோ, கிறிஸ்துவ அமைப்புகளோ தொடுக்கவில்லை.
பரவிய செய்தி
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி வழக்கு போட்டது ஒரு முஸ்லிம் அமைப்பு. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தடை செய்யச் சொல்லி வழக்கு தொடுத்தது ஒரு கிறிஸ்துவ அமைப்பு. பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிகட்டை தடை செய்ய வழக்கு தொடுத்தது ஒரு தொலைகாட்சி.

விரிவான விளக்கம்
மசூதியில் பெண்களை அனுமதிக்க வேண்டுமென்று வழக்குத் தொடுத்தால், முஸ்லீம் பெண்களின் உரிமையை வேறு மதத்தினர் கேட்க முடியாது என்று நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. ஆனால், அனைத்து பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்க வேண்டி முஸ்லீம் அமைப்பு கொடுத்த வழக்கையும், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதைத் தடை செய்யும்படி கிறிஸ்துவ அமைப்பு கொடுக்கும் வழக்கையும், ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்யச் சொல்லும் மனுவையும் நீதிமன்றம் விசாரிக்கிறது. இந்த வகையில் நீதிமன்றம் இந்துக்களிடம் பராபட்சமாக நடந்துகொள்வதாக இந்துத்துவவாதிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பிவருகிறார்கள்.
உண்மை என்ன?
மேற்கூறிய வழக்குகளைப் பற்றிய உண்மைத் தகவல்களை அறிந்துகொள்ளும் பொருட்டு இணையத்தில் தேடியதில், Supreme Court Observer என்ற இணையதளத்தில் அவ்வழக்குகளின் விவரங்கள் காணக்கிடைத்தது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தது லக்ஷ்மி சாஸ்திரி, பிரேரணை குமாரி, அல்கா சர்மா, சுதா பால் ஆகிய பெண்களும் ‘இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம்’ என்ற அமைப்பும் தான் என்று Supreme Court Observer தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கும் வழக்கு சம்பந்தமாகத் தேடியதில், விழாக்காலங்களில் பட்டாசு வெடிப்பதை முற்றிலுமாக தடை செய்யவேண்டுமென்று 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மூன்று குழந்தைகள் அவர்களது தந்தையரின் மூலமாக மனு கொடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அந்த தந்தையர்கள் வழக்கறிஞர்கள் என்றும் அவர்களது பெயர்கள் கோபால் சங்கரநாராயணன், அமித் பண்டாரி மற்றும் சௌரப் பாசின் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர்கள் அனைத்தும் இந்து மதத்தைச் சேர்ந்தவைதான்.

மேலும், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்யச் சொல்லி வழக்குப் போட்டது PETA, Animal Welfare Board போன்ற விலங்குகள் நலன் பேசும் அமைப்புகள் தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து, மேற்கூறிய வழக்குகளில் எதனையும் முஸ்லீம் அல்லது கிறிஸ்துவ அமைப்புகள் கொடுக்கவில்லை என்பது உறுதியாகிறது.
முடிவு:
முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் பிற மதத்தினரின் நம்பிக்கைகளில் தலையிடுகிறார்கள் என்ற பொய் பிம்பத்தைக் கட்டமைக்க மதவாத கண்ணோட்டத்தில் இவ்வாறு தவறான தகவல்களை இந்துத்துவவாதிகள் பரப்பி வருகிறார்கள்.