யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கோவில்களில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்க நகைகள், கட்டிகளாக மாற்றப்பட்டு, கோவில் வளர்ச்சிக்காக தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
திராவிடத்துக்கு இந்த உரிமையைக் கொடுத்தது யார்... இந்த திராவிடக் கட்சிகள் பல வருடங்களாக என்ன ஒரு கொள்ளையை அடித்திருக்கின்றன... 1977 முதல் மட்டும் தமிழ்நாடு அரசு ஹிந்து கோவில்களில் இருந்து 5,00,000 (5 லக்ஷம்) கிலோ தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளது. அது மட்டுமல்ல நீதிமன்றத்தில் மானமற்ற இந்த அரசு, கோயில் நகைகளை உருக்குவது ஒன்றும் புதியது அல்ல. இது 1977 முதலே நடைமுறையில் உள்ளது என வெட்கமற்றுச் சொல்கிறது. பழைய நகைகளை அழிப்பதே தவறு. அதுவும் கோயில் நகைகள். இவை அரசர்கள் கொடுத்தது மாத்திரமல்ல.... எத்தனையோ பக்தர்கள் சமர்ப்பணம் செய்தவை.
விரிவான விளக்கம்
இந்த திராவிடக் கட்சிகள் பல வருடங்களாக என்ன ஒரு கொள்ளையை அடித்திருக்கின்றன. 1977 முதல் மட்டும் தமிழ்நாடு அரசு இந்து கோவில்களில் இருந்து 5,00,000 (5 லட்சம்) கிலோ தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளது என்று கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்தித்தாளின் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், இது கடந்த 2021 அக்டோபர் 13 அன்று தி இந்து ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தி என்பதை அறிய முடிந்தது. அதில், “கோயில் தங்க நகைகளை உருக்கும் வழக்கம் புதிதல்ல என்றும், 1977 முதல் இது நடைமுறையில் உள்ளது என்றும் மாநில அரசு கடந்த 2021 அக்டோபர் 12 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுவரை 5 லட்சம் கிலோ நகைகள் உருக்கப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
எனவே கோவில் நகைகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்ததில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் உட்பட ஐந்து கோயில்களின் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 541.78 கிலோ தங்க நகைகள், தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பார்களாக மாற்றப்பட்டு SBI-யில் டெபாசிட் செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 28, 2024 அன்று தி இந்து வெளியிட்ட செய்தி மூலம் அறிய முடிந்தது.
மேலும் அதில், “13 கோயில்களுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகள், 442.10 கிலோகிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு, இந்தத் திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கியில் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முதலீட்டின் மூலம் ஆண்டுதோறும் திரட்டப்படும் ₹5.79 கோடி வட்டித் தொகை கோயில்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவில்களில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்க நகைகள், கட்டிகளாக மாற்றப்பட்டு, கோவில் வளர்ச்சிக்காக தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன என்பது உறுதியாகிறது.
மேலும் இவ்வாறு கோவில் நகைகளை வங்கிகளில் முதலீடு செய்யும் முறை, குஜராத் சோமநாதர் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (TTD) போன்ற பிரபலமான கோயில்களிலும் நடைமுறையில் உள்ளன என்பதை பல்வேறு செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. இதன் மூலம் கோவில் நகைகளை தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பார்களாக மாற்றும் மாநிலம் தமிழ்நாடு மட்டும் அல்ல என்பதும் உறுதியாகிறது.

முடிவு:
நம் தேடலில், 1977 முதல் மட்டும் தமிழ்நாடு அரசு இந்து கோவில்களில் இருந்து 5,00,000 கிலோ தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.