யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரின் போது சிரியா பத்திரிகையாளர்கள் ராக்கெட் ஏவியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
காஸாவின் அப்பாவி நிருபர்கள் ராக்கெட் ஏவுகிறார்கள். #இஸ்ரேல் #பாலஸ்தீனம் #FreePalestine #Israel

விரிவான விளக்கம்
கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் காஸா மீது இன அழிப்பு போரை நடத்தி வருகிறது. கடந்த 23 மாதங்களாக நீடித்து வரும் இந்த இன அழிப்பு போரில் பெண்கள் குழந்தைகள் உட்பட 62,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவரை 273 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று, தென் காஸாவில் இயங்கி வரும் நாசர் மருத்துவ வளாகத்தில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியதில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது உலகம் முழுவதிலும் பெரும் பேசு பொருளானது.
இந்நிலையில், பத்திரிகையாளர் உடுப்புகள் அணிந்த இருவர் குண்டுகளை ஏவும் வீடியோவை பதிவிட்டு, ‘காஸாவில் அப்பாவி நிருபர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ராக்கெட் ஏவுகிறார்கள்’ என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Suryana97’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த புகைப்படத்தைக் காணமுடிந்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், முகமத் அல் பைசல், ஜமால் அல் ஹசன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ‘Tag’ செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் ‘இப்போது கர்தாஹா நகரின் மீது குண்டு வீசிக்கொண்டிருக்கிறோம்’ என்ற அடிக்குறிப்பையும் காணமுடிந்தது. அல் கர்தாஹா என்பது சிரியாவில் உள்ள ஒரு நகரமாகும்.
இந்த இன்ஸ்டாகிராம் பக்கங்களை சோதனை செய்தபோது, முகமத் அல் பைசல்-ன் பக்கத்தில் ‘சிரியா நாட்டின் நாளிதழ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஜமால் அல் ஹசன்-ன் இன்ஸ்டா பக்கத்தில் ‘சிரியா நாட்டு பத்திரிகையாளர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேடியதில்,‘இட்லிப்’ என்ற சிரியா நாட்டின் நகரத்தை குறிப்பிட்டு இந்த வீடியோ யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அக்டோபர் 9, 2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த வீடியோவின் அடிக்குறிப்பிலும் ‘ஜாமல் அல் ஹசன்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

மேலும், சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிரியா அரசாங்கப் படைகள் மற்றும் ரஷ்யா படைகள் ஒருபுறமும் சிரியா குடிமை பாதுகாப்பு படையினர் மறுபுறமும் மோதலில் ஈடுபட்டது செய்திகள் மூலமாக தெரியவருகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, நடந்த கடந்த 2023 அக்டோபர் மாதம் சிரியாவில் உள்நாட்டுப் போரின் போது நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பது தெளிவாகிறது.
முடிவு:
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரின் போது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிரியா பத்திரிகையாளர்கள் ராக்கெட் ஏவியபோது எடுக்கப்பட்ட வீடியோவை, காஸாவில் உள்ள பத்திரிகையாளர்கள் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதலில் ஈடுபடுவதாக தவறாக பரப்புகிறார்கள்.