யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது பொய்யான தகவல் என்பது குறித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓமான் நாட்டு இளவரசி ‘சயீதா மோனா சைத்’ விளக்கமளித்துள்ளார்.
பரவிய செய்தி
இதுபோன்ற சவுதி அரசாங்கமும் பெட்ரோலை நிறுத்துவோம் என்று கூறினால் இந்தியா பிச்சை எடுக்கும் நாடாக மாறிவிடும் வாய் திறக்குமா சவுதி அரசாங்கம்.

விரிவான விளக்கம்
”முஸ்லிம்களை துன்புறுத்துவதை இந்திய அரசு நிறுத்தவில்லை என்றால்... ஓமான் நாட்டிலுள்ள 1 மில்லியன் இந்திய தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என்று ஓமான் நாட்டு இளவரசி எச்சரிக்கை விடுத்ததாகவும், இதேபோல் ’சவுதி அரசாங்கமும் பெட்ரோலை நிறுத்துவோம் என்று சொன்னால் இந்தியாவின் நிலை இன்னும் மோசமாகும்’ என்ற கருத்து சமூக வலைதளங்கள் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் தகவலை அடிப்படையாகக் கொண்டு, ’oman princess about expelling indian workers’ என்ற keywords மூலம் இணையத்தில் தேடியதில் ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் ஏப்ரல் 24, 2020 தேதியிட்ட செய்தியைக் காணமுடிந்தது.

ஓமான் நாட்டின் இளவரசி ’சயீதா மோனா சைத்’-ன் பெயரைக் கொண்ட ட்விட்டர் (எக்ஸ்) கணக்கில் ”இந்தியாவில் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகளுடன் ஓமான் நாடு துணை நிற்கிறது. இந்திய அரசாங்கம் முஸ்லிம்களை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை என்றால், ஓமான் நாட்டில் வாழும் ஒரு மில்லியன் இந்திய தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். நான் இந்த விவகாரத்தை ஓமான் நாட்டின் சுல்தானிடம் எடுத்துச் செல்வான்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை tag செய்து பதிவிடப்பட்டதாகவும், இதனை மறுத்து ஓமானி இளவரசி விளக்கமளித்ததாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இந்த சர்ச்சைக்கு, ’என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து இந்த பதிவு இடப்படவில்லை. எனது பெயரைப் பயன்படுத்தி போலியாக ஒரு கணக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது’ என்று ஓமானி இளவரசி பதிலளித்துள்ளார்.
மேலும், "நண்பர்களே, முதலில், என்னைப் போல் போலி செய்து (Impersonating) உருவாக்கப்பட்ட ஒரு கணக்கின் மூலம் வெளியிடப்பட்ட அவமதிக்கும் வகையிலான இந்தப் பதிவை பற்றி என் கவனத்திற்கு கொண்டு வந்த உங்கள் அக்கறைக்கு நன்றி; எனக்கும் இந்தப் பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்கள்” என்று இதுகுறித்து விளக்கமளித்திருந்தார்.
ஓமான் நாட்டிற்கான அப்போதைய இந்திய தூதர் முனு மஹாவர், மேற்கண்ட விளத்திற்காக ஓமான் இளவரசிக்கு நன்றி தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விவரங்களில் இருந்து பார்க்கையில், ‘இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது குறித்து ஓமான் நாட்டு இளவரசி எச்சரிக்கை விடுத்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது என்பதும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதுபோன்ற பொய் தகவல்கள் பரவிவருவதும்’ உறுதியாகிறது.
முடிவு:
இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது குறித்து ஓமான் நாட்டு இளவரசி எச்சரிக்கை விடுத்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. இது பொய்யான தகவல் என்பது குறித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஓமான் நாட்டு இளவரசி ‘சயீதா மோனா சைத்’ விளக்கமளித்துள்ளார்.