யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன இன மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது வரலாறு இஸ்லாம் மதத்தின், யூத மதத்தின் தோன்றத்தைவிட பழைமையானது.
பரவிய செய்தி
முகமது பிறந்தது கிபி 570. நபி அவர்கள் பிறப்பதற்கு 215 ஆண்டுகளுக்கு முன் யூதர்கள் இஸ்ரேலில் வாழ்ந்த தடையங்கள் நமக்குக் கிடைக்கிறது. யூதர்கள் தான் இஸ்ரேலின் பூர்வக்குடிகள். Deal with it.

விரிவான விளக்கம்
இஸ்ரேலில் 'செசரியா மரிட்டிமா' என்றொரு நகரம் கி.மு 22 காலகட்டத்தில் 'ஏரோது' என்ற யூத மன்னனால் கட்டப்பட்டது. அந்த நகரத்தில் கி.பி 355ல் நடந்த அகழ்வாய்வு செய்யப்பட்டபோது, ‘menorah’ என்று சொல்லப்படக்கூடிய யூதர்களின் மத அடையாளச் சின்னம் கிடைத்தது. இவையெல்லாம் யூதர்கள் தான் இஸ்ரேலின் பூர்வக்குடிகள் என்பதற்கான சான்றாக அமைவதாக கெவின் பால் என்ற யூடியூபர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்.
இஸ்ரேலில் செசரியா மரிட்டிமா (Caesarea Maritima) என்றொரு நகரம் உண்டு. இது யூத மன்னனான ஏரோது (Herod the Great) என்பவரால் கிமு 22ல் ஆரம்பித்து அடுத்த 30 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு நகரம். கட்டியது யாரென நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: ஒரு யூத மன்னன்.
அந்த நகரத்தில் கிபி 355ல் நடந்த… pic.twitter.com/LSKfjSPrkY
உண்மை என்ன?
‘செசரியா மரிட்டிமா’ என்ற நகரத்தில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது பற்றி இணையத்தில் தேடியதில் ’ARCHAEOLOGICAL INSTITUTE of AMERICA’ என்ற தளத்தில் இதுகுறித்த தகவல்களை காண முடிகிறது. இந்த நகரத்தில் ’ஏரோது’ என்ற மன்னனின் ஆட்சியின் போது, கி.மு 22-10 ஆண்டுகளில் ஒரு துறைமுகம் கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. ஆனால், ‘JEWISH VIRTUAL LIBRARY’ என்ற தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த நகரம் 1950கள், 1960கள் காலகட்டத்தில்தான் அகழ்வாய்வு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இதிலிருந்து, ‘செசரியா மரிட்டிமா’ என்ற நகரம் கிபி 355ஆம் ஆண்டிலிலே அகழ்வாய்வு செய்யப்பட்டதாக சொல்லப்படுவது தவறான தகவலாகும் என்பது உறுதியாகிறது.
மேலும் தேடியதில், நூர் மசல்ஹா என்பவர் எழுதிய ’PALESTINE: A FOUR THOUSAND YEAR HISTORY’ என்ற நூலில் பாலஸ்தீனத்தின் வரலாறு பற்றி எழுதப்பட்டிருப்பதை காணமுடிந்தது.

அதன்படி, கி.மு.1186-1155 ஆண்டுகளில் மூன்றாம் ராமஸெஸ் மன்னன் ஆட்சியின் போது, அதாவது 3200 ஆண்டுகளுக்கு முன்பே பெல்செட் என்ற இடத்தில் நடந்த போர் குறித்தும், பிலிஸ்து, பெலஸ்தியா ஆகிய பெயர்களில் பாலஸ்தீனம் அழைக்கப்பட்டது குறித்தும் அறிந்துகொள்ளமுடிகிறது. 3200 ஆண்டுகளுக்கு முன்பே அங்கே வாழ்ந்த மக்கள் உள்ளூர் மக்கள் (Indigenous Population) தான் என்றும் அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் (Migrated) அல்ல என்றும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அதாவது, தற்போதைய பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன இன மக்கள் 3200 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த காலகட்டத்தில் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த மக்கள் குழுவினர் பல கடவுள்களை வழிபடும் கலாச்சாரத்தை கொண்டிருந்தார்கள். கி.பி 7ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மதம் தோன்றி பரவியது. அதன் பின்னர் இஸ்லாமிய பேரரசுகள் தோன்றியதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்திலும் இஸ்லாம் பரவியது என்று நன்மாறன் திருநாவுக்கரசு எழுதிய ’சிதிலங்களின் தேசம்’ என்ற நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து, இன்றைய பாலஸ்தீன நிலத்தில் யூதர்கள் குடியேறுவதற்கு முன்பு மட்டுமல்ல, யூதம் என்ற மதம் பிறக்கும் முன்பே பாலஸ்தீன இன மக்கள் பாலஸ்தீன நிலப்பரப்பில் வாழ்ந்ததற்கான நிரூபணங்கள் கிடைக்கின்றன.
மேலும், பாலஸ்தீன வரலாற்றை இஸ்லாம் அல்லது இஸ்லாம் மத தோன்றிய காலகட்டம் ஆகியற்றுடன் குழப்பிக்கொள்கிறார்கள். இஸ்லாம் என்ற ஒற்றை கடவுள் மதம் தோன்றுவதற்கு முன்பே பாலஸ்தீன இன மக்கள் உயர்ந்த நாகரித்துடன் வாழ்ந்துள்ளதற்கான வரலாற்று குறிப்புகள் இருக்கின்றன.
முடிவு:
பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன இன மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது வரலாறு இஸ்லாம் மதத்தின், யூத மதத்தின் தோன்றத்தைவிட பழைமையானது. இதனால், பாலஸ்தீன நிலத்திற்கு யூதர்கள் தான் பூர்விக குடிகள் என்று சொல்வது வரலாற்றை திரித்துக் கூறுவதாகும்.