யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
’கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்கள் நல வாரியம்’ என்பது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் நிதியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்து கோவில்களின் நிதி பிற மதங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை.
பரவிய செய்தி
’இந்து கோவில் நிதி எவ்வாறு திருச்சபை ஊழியரின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது?’

விரிவான விளக்கம்
சமீபத்தில் தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ”இந்து சமய அறநிலையத்துறை பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? மக்கள் இதை ஒரு சதிச் செயலாக பார்க்கிறார்கள்” என்று பேசியது சர்ச்சையானது. இதில் இந்து கோவில்களின் நிதியை அறநிலையத்துறை கோவில் அல்லாத பிற பணிகளுக்காக கையாள்வதாக விவாதம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது, கார் ஒன்றின் முகப்பில் ’கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் திருச்சபை ஊழியர்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசு’ என்று எழுதிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ’இந்து கோவில் நிதி திருச்சபை ஊழியர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுவதாக’ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
How come Hindu temple funds being used for Christian church employee welfare..
Why church can’t take care of their own employees , Feeding on Hindu blood just to shred Hindu numbers 😠
Pls Take needful steps to this anna@annamalai_k @asuvathaman @HRajaBJP pic.twitter.com/YhSGAcwblD
உண்மை என்ன?
முதலில், ‘கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் திருச்சபை ஊழியர்கள் நல வாரியம்’ என்பது குறித்து தேடினோம். இது குறித்து திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பாக அதன் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பை காணமுடிந்தது.
09/03/2023 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்களில் பணி புரியும் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக “கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்” அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சேருவதற்கு விண்ணப்பிக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த தகவல்களுக்கு ’மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை’ அணுகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, இந்த நல வாரியம் ‘பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்’ கீழ் செயல்படுவது தெரிய வருகிறது.
இதேபோல், முஸ்லிம் சமூக மக்களுக்காக ’உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்’ பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.

மேலும், இந்து கோவில்களின் நிதிகள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து தேடுகையில், ’1959ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக்கொடைகள் சட்டத்தின்’ பத்தாவது அத்தியாயத்தில் இதுகுறித்து விவரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அதில், ‘கோவில் நிதியத்திலிருந்து கோவில், அதன் கட்டிடங்கள் ஆகியவற்றை நல்ல நிலையில் பராமரிப்பது, அந்த கோவிலில் வழக்கத்தில் உள்ள சமய சடங்குகளுக்கு செலவு செய்தல், இந்து சமுதாயத்தின் கல்வி, முன்னேற்றம், சமூக மற்றும் பண்பாட்டு மேம்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தெளிவாக ’இந்து சமுதாயத்தின் கல்வி, சமூக மற்றும் பண்பாட்டு மேம்பாடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, இந்த நிதிகள் பிற மத நிறுவனங்களுக்காக பயன்படுத்த முடியாது என்று தெரிகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, ’கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்கள் நல வாரியம்’ என்பது ’பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்’ நிதியிலிருந்து செயல்பட்டு வருகிறது என்றும், அதற்கு இந்து கோவில்களின் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்கப்படுவதில்லை என்பதும் தெரியவருகிறது.
முடிவு:
இந்து கோவில்களின் நிதி ’கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்கள் நல வாரியத்திற்காக செலவு செய்யப்படுவதாக கூறப்படுவது எவ்வித ஆதரமுமற்ற பொய்யான தகவலாகும். மதவாதக் கண்ணோட்டத்தில் இவ்வாறான தவறான தகவலை பரப்பிவருகிறார்கள்.