யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவக்கூடிய புகைப்படங்கள் வெவ்வேறு சம்பவங்களுடன் காலகட்டத்துடனும் தொடர்புடையவை. இப்படங்களுக்கும் தற்போதைய இஸ்ரேல் - ஹிஸ்புல்லா விவகாரத்தின்போது எடுக்கப்பட்டவையல்ல.
பரவிய செய்தி
போரில் உயிர் நீத்த இஸ்ரேல் நாட்டு இராணுவ வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டது. "வினை விதைத்தால் அதை அறுவடை செய்தே ஆகவேண்டும்"

விரிவான விளக்கம்
இஸ்ரேலுக்கும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே நடந்துவந்த தாக்குதல், தற்போது மத்தியகிழக்குப் பகுதியில் போர் ஏற்படும் அளவுக்குத் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில் இறந்த இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி என மூன்று புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
முதல் புகைப்படம் எடுக்கப்பட்ட அதே இடத்தில் எடுத்த வேறொரு புகைப்படம் ‘The Jerusalem Post’ என்ற ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஹபிமா சதுக்கத்தில் போராட்டம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இதுகுறித்து தேடியதில், ‘Sky News’ ஊடகத்திலும் செய்தி வெளியிடப்பட்டு இருந்ததைக் காணமுடிந்தது. 2023, அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டனர். அதில் 6 பேரின் உடல் இறந்தநிலையில் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இச்சம்பவத்துக்காக காலியான சவப்பெட்டிகளுடன் நூதனமான முறையில் இஸ்ரேலில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இராணுவ வீரர்கள் இறந்ததாகத் தவறாகப் பரப்புகின்றனர்.
புகைப்பட விற்பனைத்தளமான ‘Alamy-ல்’ இரண்டாவது புகைப்படம் 2023, நவம்பர் 29ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 'Kiril Brodski' என்ற இஸ்ரேல் ராணுவ வீரர் ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் இறந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்டதுதான் இந்தப் புகைப்படம்.

மூன்றாவதாக உள்ள புகைப்படம் ‘Times Of Israel’ என்ற தளத்தில் வெளியான ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. 2022, அக்டோபர் 12ஆம் தேதி West Bank பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 'Ido Baruch' என்ற ராணுவ வீரர் உயிரிழந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நிகழ்வுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போதைய இஸ்ரேல் - ஹிஸ்புல்லா, ஈரானுக்கு இடையேயான பிரச்சனையுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
போரில் உயிர்நீத்த இஸ்ரேல் நாட்டு இராணுவ வீரர்களை அடக்கம் செய்வதாகப் பரவும் புகைப்படம் வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையதும் பழைய புகைப்படங்களுமாகும். இதனை தற்போதைய இஸ்ரேல் - ஹிஸ்புல்லா சச்சரவுடன் தொடர்புப்படுத்தி தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.