YouTurn

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருக்கிறதா தமிழ்நாடு அரசு?

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருக்கிறதா தமிழ்நாடு அரசு?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மலையேற்ற சுற்றுலாவிற்காக (Trekking) முன்பதிவு செய்பவர்களிடம் மட்டும்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பரவிய செய்தி

தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூபாய். 5099  தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்ற அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆன்மீக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்தோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



X Link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் மலையேற்றப் பயணங்களுக்குச் செல்பவர்கள், ஆங்காங்கே உள்ள வனச்சரகங்களில் அனுமதிபெற்று செல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. சிலர் இவ்வாறு முறையாக அனுமதி வாங்காமலும் பயணம் செய்கின்றனர். இதனால் மலையேற்றப் பயணங்களை  ஒழுங்குபடுத்தும் வகையில் விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது. அதன்படி இந்தாண்டு ஜனவரி மாதம் விதிகளை வகுத்துமுடித்தது. 


இதன்படி, மலையேற்றப் பயணத்திற்கு உகந்த வகையில் இருக்கும் 124 வனப்பாதைகள் அடையாளம் காணப்பட்டது. முதல்கட்டமாக, அவற்றில் 40 பாதைகளை தேர்வு செய்து நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது. இந்தப் பாதைகளில் பயணம் செய்ய இணையதளத்திலே முன்பதிவு செய்துகொள்ளலாம். அதற்கான www.trektamilnadu.com என்னும் இணையதளத்தையும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 


இதற்கிடையில், பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் யாத்திரை மேற்கொள்ள அரசிற்கு ரூ. 5099 ரூபாய் கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாகவும், அதனை தான் கண்டிப்பதாகவும்  தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளர் அஷ்வத்தாமன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 


https://x.com/i/web/status/1850107307994022223


உண்மை என்ன?


மலையேற்றப் பயணத்திற்காக தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கும் இணையதளத்தில் வெள்ளியங்கிரி மலையேற்றம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை படித்தோம். ஒரு நபருக்கும் GST வரி உள்ளடக்காமல் ரூபாய் 5099/- என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மலையேற்றத்திற்காக வழங்கப்படும் பயணத் தொகுப்பிற்கும் சேர்த்துதான் இந்தக் கட்டணம். 


இந்த பயணத் தொகுப்பில், ”அனுமதி கட்டணம், வழிகாட்டி சேவைக்கான கட்டணம், காப்பீடு, துணிப்பை, தொப்பி, பேனா, பறவைகள் பற்றிய துண்டுப்பிரசுரம், 13 கி.மீ பயணத்திற்கான போக்குவரத்துக் கட்டணம், இரண்டு வேளை உணவு, இரண்டு வேளை சிற்றுண்டி” ஆகியவை அடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 



மேலும், இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தொடர்பு எண்ணை தொடர்புகொண்டு ‘Trek Tamilnadu’-ன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேகா அவர்களிடம் பேசினோம்.


அவர் கூறுகையில், ”இந்த மலையேற்ற கட்டணம் Trekking செல்பவர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு அல்ல. மேலும், பக்தர்கள் யாத்திரை செல்லாத மாதங்களில் மட்டுமே இந்த மலையேற்றம் ஒருங்கிணைக்கப்படும். சுற்றுலா பயணிகளின் மலையேற்றம் கோவிலுக்கு முன்பாகவே முடிந்துவிடும். பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்யப்படாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், ”பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மை அல்ல, அவை பொய் செய்திகள்” என்றும் அவர் விளக்கமளித்தார். 



வெள்ளியங்கிரிக்கு மலையேற்ற சுற்றுலாவிற்கான (Trekking) முன்பதிவு கட்டணம் பற்றிய அறிவிப்பை திரித்து,  பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டதாக தவறாக பரப்பப்படுகிறது.


முடிவு:


வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டதாக பரப்பப்படும் தகவல் திரிக்கப்பட்டதாகும். மலையேற்ற சுற்றுலாவிற்காக (Trekking) முன்பதிவு செய்பவர்களிடம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க