யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது மின்சார தேவையாக பயன்படுத்தி வந்த ஜெனரேட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தாகும்.
பரவிய செய்தி
பிரேக்கிங் நியூஸ் :- லெபனோனில் hezbollah தீவிரவாதிகள் கார்களில் பதுக்கி வைத்து இருந்த குண்டுகள் வெடித்ததால் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள அணைத்து கார்களும், கட்டிடங்கள் பலத்த சேதம். சுமார் 20 பேர் மரணம், பல பேர் படுகாயம்..

விரிவான விளக்கம்
வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் தீப்பிடித்து எரிகிறது, இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் வீடியோவை பதிவிட்டு, இது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் கார்களில் பதுக்கி வைத்திருந்த குண்டுகள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து என்றும், இதனால் 20 பேர் மரணமடைந்தனர் என்றும் சமூக வலைதளங்களில் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இந்த வீடியோவின் Keyframe -களைக் கொண்டு தேடுகையில், 'Barlaman Today’ என்னும் யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் "பெய்ரூட் நகரத்தில் மின் ஜெனரேட்டரால் ஏற்பட்ட தீ வாகனங்களையும் கட்டிடங்களையும் பற்ற வைத்தது" என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை காணமுடிந்தது.

இதனைத்தொடர்ந்து, "பெய்ரூட் நகர ஜெனரேட்டர் தீ விபத்து" என்ற keywords கொண்டு இணையத்தில் தேடியதில், ’Arab News’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியின்படி, "பெய்ரூட் நகரத்தின் ஹம்ரா மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி சனிக்கிழமையன்று ஏற்பட்ட பெரிய தீ விபத்தில், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த பல கார்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலம் பரவியது" என்று தெரிய வருகிறது.

மேலும், இந்த தீ மின் ஜெனரேட்டர் வெடித்ததால் ஏற்பட்டது என்றும், இந்த தீ அருகில் இருந்த கட்டிடத்திற்கும் பரவியது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், இந்த தீ விபத்து பற்றி 'International Fire and Safety Journal' வெளியிட்டுள்ள செய்தியிலிருந்து, " இந்த தீ விபத்தால் ஒரு வெளிநாட்டு தொழிலாளி மற்றும் ஒரு லெபனான் நாட்டைச் சேர்ந்த பெண் ஆகியோருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்படுள்ளது" என்று தெரிய வருகிறது. இந்த தீ விபத்தால் யாரும் மரணமடையவில்லை என்பது தெளிவாகிறது.
இதிலிருந்து, 'மின் ஜெனரேட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீயின் காரணமாகத்தான் இந்த கார்கள் எரிகிறது' என்பது தெளிவாகிறது. ஆனால், இதனை திரித்து ஹிஸ்புல்லா அமைப்பினர் கார்களில் பதுக்கி வைத்து இருந்த குண்டுகள் வெடித்ததால் ஏற்பட்டது என்று பரப்புகின்றனர். மேலும், இதனால் 20 பேர் மரணமடைந்தனர் என்பது முற்றிலும் பொய்யான தகவலாகும்.
முடிவு:
பெய்ரூட் நகரத்தில் ஜெனரேட்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் கார்களில் பதுக்கி வைத்து இருந்த குண்டுகள் வெடித்ததால் ஏற்பட்டது என்று வலதுசாரிகளால் திரித்து பரப்பப்படுகிறது. மேலும், 20 பேர் மரணமடைந்ததாக கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.