யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
லீப் ஆண்டைத் தவிர்த்து பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் நான்கு நாட்கள் வருவது என்பது வழக்கமான ஒன்றுதான். இதை அரிய நிகழ்வு என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
வரவிருக்கும் பிப்ரவரி மாதம் உங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருபோதும் நிகழ வாய்ப்பில்லை. 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அரிய நிகழ்வு நடக்கும்.

விரிவான விளக்கம்
823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அரிய பிப்ரவரி மாதம் 2026 ஆம் ஆண்டு வருகிறது. வரும் பிப்ரவரியில் 4 ஞாயிறு, 4 திங்கள், 4 செவ்வாய், 4 புதன், 4 வியாழன், 4 வெள்ளி மற்றும் 4 சனிக்கிழமைகள் இருக்கின்றன.
உண்மை என்ன?
வரவிருக்கும் பிப்ரவரி மாதம் உங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒருபோதும் நிகழ வாய்ப்பில்லை எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் வதந்தியே.
லீப் ஆண்டு என்று அழைக்கப்படும் ஆண்டுகளில் மட்டுமே பிப்ரவரியில் 29 நாட்கள் இருக்கும். லீப் ஆண்டு தவிர மற்ற ஆண்டுகளில் பிப்ரவரி மாதம் 28 நாட்களையே கொண்டிருக்கும். ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன. பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் இருப்பதால், அந்த 28 நாட்களை 7 ஆல் வகுத்தால் 4 கிடைக்கும்.
அதன் அடிப்படையில் அந்த மாதத்தில் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் சமமான எண்ணிக்கையில் நாட்கள் வரும். அதாவது நான்கு ஞாயிறு, நான்கு திங்கள், நான்கு செவ்வாய், நான்கு புதன், நான்கு வியாழன், நான்கு வெள்ளி மற்றும் நான்கு சனிக்கிழமைகள் வரும்.
லீப் ஆண்டில் பிப்ரவரி 29 நாட்கள் கொண்டிருப்பதால், ஒரு கிழமையில் மட்டும் கூடுதலாக ஐந்து நாட்கள் வரும். இது ஒரு பொதுவான நிகழ்வே.


உதாரணமாக, 2021, 2025 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் வரும் பிப்ரவரி மாதத்தின் காலண்டர்களை இங்கே இணைத்துள்ளோம். அவற்றிலும் நான்கு ஞாயிறு, நான்கு திங்கள், நான்கு செவ்வாய், நான்கு புதன், நான்கு வியாழன், நான்கு வெள்ளி மற்றும் நான்கு சனிக்கிழமைகளே உள்ளன என்பதை தெளிவாகக் காண முடிகிறது.

எனவே, லீப் ஆண்டைத் தவிர்த்து இப்படி பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் நான்கு நாட்கள் வருவது என்பது வழக்கமான ஒன்றுதான். இதை அரிய நிகழ்வு என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அரிய பிப்ரவரி மாதம் 2026 ஆம் ஆண்டு வருகிறது என்று பரவும் தகவல் வதந்தியே என்பது உறுதியாகிறது.