யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உலகின் முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை, கார் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் கார் என்ஜின்களை தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ்.. உலகளவில் (ஆண்டுக்கு) எத்தனை ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விற்கப்படுகின்றன என்று தெரியுமா? சுமார் 5700. ஒரு என்ஜினின் உற்பத்தி செலவு : சுமார் ₹50-70 லட்சம். மொத்த உற்பத்தி மதிப்பு (அவர்கள் இங்குள்ள அனைத்து என்ஜின்களையும் தயாரித்தாலும் கூட) : சுமார் 3000 கோடி. பல மாநில அரசுகள் எங்கும் செல்லாமல் 10-20,000 கோடி முதலீட்டைப் பெறுகின்றன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று ₹1–2 லட்சம் கோடி முதலீட்டை பெற்றுள்ளார்.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்ற அவர் முதலீட்டாளர்கள், தமிழ் மக்களை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் “கார் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. பல மாநில அரசுகள் எங்கும் செல்லாமல் 10k-20,000 கோடி முதலீட்டைப் பெறுகின்றன. ஆனால் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று இந்த நிறுவனத்துடன் ₹1–2 லட்சம் கோடி முதலீட்டை தான் பெற்றுள்ளார்” என்று கூறி பலரும் தங்களது சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
Rolls Royce to manufacture engines in Tamil Nadu – Paid trolls of Stalin jumping
Do you know how many Rolls Royce cars are sold worldwide (yearly)?
-Around 5700
-One Engine manufacturing cost : Aprx ₹50-70 lakhs
-Total production value (even if they manufacture all the engines…
உண்மை என்ன?
பரவி வரும் தகவல்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் IAMPL (International Aerospace Manufacturing Pvt. Ltd) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வானூர்தி இயந்திரங்கள் (Aero-Engine) தொடர்பான பாகங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம், உலகின் முன்னணி விமான இயந்திரங்கள் (Aero engines) மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப (Defence) நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-royce) நிறுவனத்துடன் இணைந்து விரிவாக்கம் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.
அந்த வகையில், ஓசூரில் செயல்பட்டு வரும் ஐஏஎம்பிஎல் நிறுவனத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இணைந்து MRO ( Maintenance, Repair, overhaul) மையம், ஆராய்ச்சி & மேம்பாட்டு மையம் (R&D), மற்றும் பயிற்சி நிறுவனம் ( Training Institute ) அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவின் பாதுகாப்புத் துறை தொழில் வழித்தடத்தின் முக்கிய மையமாக விளங்கும்.
இதே போன்று, “இந்தியாவின் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பதால், ரோல்ஸ் ராய்ஸுடனான இந்த ஈடுபாடு மேம்பட்ட விண்வெளி உற்பத்திக்கான மையமாக தமிழ்நாட்டை மாற்றும் என்று மாநில தொழில்துறை தெரிவித்துள்ளது“ என்று குறிப்பிட்டு ‘Financial Express‘ ஊடகத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், உலகின் முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை, கார் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர் என்பது உறுதியாகிறது.