யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்ட் ஆகும். ‘புதிய தலைமுறை’ ஊடகத்தின் அவ்வாறு செய்தி எதையும் வெளியிடவில்லை என்று விளக்கமளித்துள்ளது.
பரவிய செய்தி
SIT கேஸ் ல ராஜ்மோகன் பேரு கூட இல்ல அதுக்கே 20 நாள் காணாம போய்ட்டான்.. CBI கேஸ் ல A4 குற்றவாளி பாவம் பயபுள்ள சோறு சாப்பிடுவானா இல்லையானு வேற தெரியல @imrajmohan

விரிவான விளக்கம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் இறந்தனர். இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில், கரூர் வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கையை கடந்த அக்டோபர் 22ஆம் தேதி கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவெகவின் துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகனை தமிழ்நாடு போலீஸ் கரூர் வழக்கில் குற்றவாளியாக சேர்க்காதது குறிப்பிடத்தக்கது. ஆனால், சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் ராஜ்மோகன் A4 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து ‘புதிய தலைமுறை’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறி நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
SIT கேஸ் ல ராஜ்மோகன் பேரு கூட இல்ல அதுக்கே 20 நாள் காணாம போய்ட்டான்..
CBI கேஸ் ல A4 குற்றவாளி பாவம் பயபுள்ள சோறு சாப்பிடுவானா இல்லையானு வேற தெரியல...😂😂😂😂 @imrajmohan pic.twitter.com/SZJC0S577k
உண்மை என்ன?
கரூர் வழக்கில் ராஜ்மோகன் A4 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக ‘புதிய தலைமுறை’ ஊடகம் ஏதேனும் செய்தி வெளியிட்டிருக்கிறதா? என்று அவ்வூடகத்தின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். ஆனால் அவ்வாறு ஒரு செய்தி காணக் கிடைக்கவில்லை.
மேலும் இது குறித்து தேடியபோது, ‘புதிய தலைமுறை’ ஊடகத்தின் Live updates என்ற வலைப் பக்கத்தில் அக்டோபர் 24ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.
அதில், ராஜ்மோகன் A4 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக பரப்பப்படும் நியூஸ் கார்டை ‘புதிய தலைமுறை’ வெளியிடவில்லை என்று மறுத்துள்ளது.

மேலும், கரூர் வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது பற்றிய எந்த செய்தியிலும் ராஜ்மோகன் A4 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லை.
முடிவு:
தவெக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகனை கரூர் வழக்கில் சிபிஐ A4 குற்றவாளியாக சேர்த்துள்ளதாக பரப்பப்படும் ‘புதிய தலைமுறை' ஊடகத்தின் நியூஸ் கார்ட் போலியாக உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ் கார்டை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்புகிறார்கள்.