யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தோனேசியாவில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் எரிந்து சேதமான வீடியோவை லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
இஸ்ரேலின் வான்வெளி விமான தாக்குதலில் மக்கள் குடியிருப்பு வீடுகளில் "ஹிஸ்புல்லா' பதுக்கி வைத்திருந்த வெடி பொருள்கள் வெடித்து வானில் தீ பிளம்பாக மாறி வெடிகள் பதுக்கிய வீடுகள் ஏரியும் காட்சி....

விரிவான விளக்கம்
லெபனான் நாட்டில் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெடிபொருட்கள் வெடித்து வானில் சிதறும் காட்சி என்றும் வீடுகள் எரியும் காட்சி என்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ’பிபிசி தமிழ்’ தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இஸ்ரேல் தாக்குதல் நடத்திய கட்டிடத்தில் எந்த ஆயுதங்களையும் தங்கள் அமைப்பு பதுக்கி வைக்கவில்லை என ஹிஸ்புல்லா தரப்பில் கூறிய விளக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரவக்கூடிய வீடியோவில், வானத்தில் வெடி வெடிப்பது மற்றும் கட்டிடங்கள் எரிவது என இரண்டு காட்சிகள் இருப்பதைக் காணமுடிகிறது. இந்த கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், முதல் பகுதி வீடியோ கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அல்ஜீரியா நாட்டில் நடத்தப்பட்ட வான வேடிக்கை எனக் குறிப்பிட்டு யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியது செப்டம்பர் 23ஆம் தேதி. ஆனால், அதற்கு முன்னரே இந்த வீடியோ இணையத்தில் உள்ளது. இதிலிருந்து இந்த வீடியோவிற்கும் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்பதை அறியமுடிகிறது. இருந்தும் இது சரியாக எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற முழுமையான தகவல் தெரியவில்லை. தகவல் கிடைக்கும்பட்சத்தில் இக்கட்டுரையில் கூடுதல் தகவலாக இணைப்போம்.
அடுத்ததாகக் கட்டிடங்கள் எரியக்கூடிய வீடியோ குறித்துத் தேடினோம். இச்சம்பவம் பற்றி ‘Indonesian TV’ என்ற ஊடகத்தில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ’Sangkulirang Market’-ல் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்து சேதமாகியுள்ளது. அந்த தீ விபத்தின்போது எடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ.
பரவக்கூடிய வீடியோவில் உள்ள காட்சிகள் செய்தியில் உள்ள வீடியோவுடன் பொருந்துவதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

இவற்றிலிருந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி தவறான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
இந்தோனேசியாவில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள் எரிந்து சேதமான வீடியோவை லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.