யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இஸ்ரேலில் யூதர்கள் மத்தியில் இயேசு பற்றி பெண் ஒருவர் போதனை செய்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதனை பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
இந்தியர்களே திரும்பி உங்க நாட்டுக்கு போங்க என்று இஸ்ரேலியர்கள் கோபமாக கத்துகிறார்கள். இது தெரியாம இங்க இருக்கும் சங்கிகள் இஸ்ரேலியர்களுக்கு சொம்படிக்கிறாங்க..
விரிவான விளக்கம்
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13-ந்தேதி ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது ‘பி2 ஸ்பிரிட்’ ரக விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இச்சூழலில், “இந்தியர்களே திரும்பி உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” என்று இஸ்ரேலியர்கள் மிரட்டுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்தியர்களே திரும்பி உங்க நாட்டுக்கு போங்க என்று இஸ்ரேலியர்கள் கோபமாக கத்துகிறார்கள்*
இது தெரியாம இங்க இருக்கும் சங்கிகள் இஸ்ரேலியர்களுக்கு சொம்படிக்கிறாங்க pic.twitter.com/U2cXIyg2iD
देखो इजरायल के लोग भारत के लोगो को देखना भी पसन्द नहीं करते हैं, किस तरह से वो खदेड़ रहे हैं , वहां से इंडिया वापिस जाने के लिए कह रहे हैं। किया अब वह नाजायज सामने आयेंगे जो कल तक इजरायल से जुड़ी फर्जी खबरें हल्ला बोल कर रहे थे।
#viralvideo pic.twitter.com/Kb6C9RPACf
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், 2025 மார்ச் 06 அன்று “encounterjesusdaily“ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவி வரும் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.
அப்பதிவில், “இஸ்ரேலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும், வீடியோவில் அப்பெண் யாஷ்வா என்றும் ஜீசஸ் கிரைஸ்ட் (Jesus Christ) என்றும் கூறுவதையும் தெளிவாகக் காண முடிகிறது.
இதன் மூலம் இஸ்ரேலில் யூதர்கள் மத்தியில் இயேசு பற்றி போதனை செய்த பெண்ணை, யூதர் ஒருவர் விரட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதை அறிய முடிகிறது.
மேலும் வீடியோவில் இருக்கும் அதே பெண் இஸ்ரேலில் பல இடங்களில் போதனை செய்வதை மற்றொரு வீடியோவிலும் தெளிவாகக் காண முடிகிறது.
ஆனால், இந்தப்பெண் இந்தியர் தானா என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதன் மூலம், இஸ்ரேலில் யூதர்கள் மத்தியில் இயேசு பற்றி பெண் ஒருவர் போதனை செய்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது உறுதியாகிறது. ஆனால் பலரும் தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல் ஈரான் போரோடு தொடர்புபடுத்தி இதை தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், இந்தியர்களை விரட்டும் இஸ்ரேலியர்கள் எனப் பரவும் செய்திகள் தவறானவை. பரவி வரும் வீடியோ இஸ்ரேலில் யூதர்கள் மத்தியில் இயேசு பற்றி போதனை செய்யும் பெண்ணை யூதர் ஒருவர் விரட்டியபோது எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.