யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இஸ்லாமியக் கல்வியின் அடிப்படையில் படிப்பை முடித்தவருக்கு ‘மௌலானா’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இக்கல்வி இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. ’இன்னார் மட்டுமே’ கற்க வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் கிடையாது.
பரவிய செய்தி
இசைஞாணி இளையராஜா விஷயத்தில் பொங்கிய யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தில் அனைவரும் சமம் என்று மார்தட்டிக் கொள்கிறாரே, அவரால ஒரு மவுலானாவாக முடியுமா? முடியாது. ஆனால் இளையராஜா தீட்சை பெற்று வந்தால் இப்போ கூட ஆதீனம் ஆகலாம். அப்படிப்பட்ட புனிதமான மதம் டா எங்க இந்து மதம்

விரிவான விளக்கம்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜா ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பேசு பொருளானது. இதன் தொடர்ச்சியாக இந்து மதத்தில் உள்ள தீண்டாமை பற்றியும் விவாதங்கள் எழுந்தன.
இசைஞாணி இளையராஜா விஷயத்தில் பொங்கிய யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தில் அனைவரும் சமம் என்று மார்தட்டிக் கொள்கிறாரே,
அவரால ஒரு மவுலானாவாக முடியுமா? முடியாது.
ஆனால் இளையராஜா தீட்சை பெற்று வந்தால் இப்போ கூட ஆதீனம் ஆகலாம்.
அப்படிப்பட்ட புனிதமான மதம் டா எங்க இந்து மதம் 🚩 pic.twitter.com/9UD0pRtQGo
இந்நிலையில், இளையராஜா தீட்சை பெற்றால் ஆதீனம் ஆகலாம். இதுவே இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன் சங்கர் ராஜா அர்ஷத் அல்லது மௌலானா ஆக முடியுமா என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இஸ்லாம் மதத்தில் இருக்கும் ஒருவர் மௌலானாவாக முடியுமா என்பது குறித்துத் தேடினோம். இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கக்கூடிய ‘Islam QA’ என்ற இணையதளத்தில் இக்கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் அதற்குரிய கல்வி கற்று மௌலானாவாக முடியும். இஸ்லாமியக் கல்வியின் அடிப்படையில் படிப்பை முடித்தவருக்கு ‘மௌலானா’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. பொதுவாக ’ஆலிம்’ என்று குறிப்பிடப்படும் இதனை முடிக்க 5-8 ஆண்டுகளாகும். இதனை முடித்த பிறகு இஸ்லாமியச் சட்டம் குறித்தும் படிக்கலாம்.
இக்கல்வி இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. ’இன்னார் மட்டுமே’ கற்க வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் கிடையாது. அதேபோல், ஆண்-பெண் இருவருக்கும் கல்வி பொதுவான உரிமையாகவே இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இஸ்லாமியக் கல்வி மூலம் யார் வேண்டுமானாலும் மௌலானாவாகலாம் என்பதை அறிய முடிகிறது.
ஆதீனம் - சங்கராச்சாரியார்:
”அதீனம் மடங்களின் முக்கிய நோக்கம் சைவ சித்தாந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது" எனச் சென்னை பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்த துறைத் தலைவர் முனைவர் நல்லூர் சரவணன் கூறியதாக ’பிபிசி’ கட்டுரையில் உள்ளது. அதே கட்டுரையில், ”தமிழ் வளர்ப்பதே ஆதீனங்களின் நோக்கமென” பேராசிரியர் அருணன் கூறியதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி இருப்பினும் ’ஆதீனம்’ என்ற கட்டமைப்பில் பிராமணர் அல்லாதவர்கள் ஆதீனமாகின்றனர். இது அனைத்து ஜாதியினருக்குமானதாக உள்ளது.
சங்கர மடத்தின் மடாதிபதியாக இருக்கக்கூடிய ‘சங்கராச்சாரியார்’ பதவிக்குப் பிராமணர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர். பிராமணர் அல்லாதவர் நியமிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக இருந்து வரும் நிலையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் இயற்றப்பட்டு பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டன. பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப்படக் கூடாது என எதிர்ப்புகள் தெரிவித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
இஸ்லாத்தில் அதற்குரிய கல்வி கற்று யார் வேண்டுமானாலும் மௌலானா ஆக முடிகிறது. இதுவே இந்து மதத்தில் பிராமணர்கள் மட்டுமே சங்கராச்சாரியாராகவும் அர்ச்சகராகவும் ஆகக் கூடிய ஜாதிய பாகுபாடு நிலவுகிறது.
முடிவு:
இஸ்லாமியக் கல்வியின் அடிப்படையில் படிப்பை முடித்தவருக்கு ‘மௌலானா’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இதனை முடித்த பிறகு இஸ்லாமியச் சட்டம் குறித்தும் படிக்கலாம். இக்கல்வி இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. ’இன்னார் மட்டுமே’ கற்க வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் கிடையாது.