யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மது குடித்தல் புகை பிடித்தல் பழக்கம் உடையவர்கள் தினமும் எள்ளு உருண்டையைச் சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றலாம் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல.
பரவிய செய்தி
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்! மது குடித்தல் புகை பிடித்தல் போன்ற தீய செயல்கள் உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு எள் உருண்டை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.
விரிவான விளக்கம்
சமூக வலைத்தளங்களில் மருத்துவக் குறிப்புகள் சொல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எந்தவித மருத்துவ தகுதியும் இல்லாத யாரோ ஒருவரால் வழங்கப்படும் இத்தகைய அறிவுரைகளைப் பலரும் பின்பற்றவும் செய்கின்றனர்.
அப்படி, ’V Tamil TV’ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது தொடர்பாக ஒரு கார்டு பதிவிடப்பட்டுள்ளது. அதில், மது குடித்தல் புகைப்பிடித்தல் போன்ற பழக்கம் உள்ளவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையைச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கல்லீரல் சிறப்பு மருத்துவர் சிரியக் அபி ஃபிளிப்ஸ் (Cyriac Abby Philips) தனது சமூக வலைத்தளத்திலும் ஊடகங்களிலும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். எந்த அளவில் மது அருந்துவதும் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் புற்றுநோய் வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியது ’நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தளத்தில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மது அருந்துவதால் மனநலக் கோளாறு, கணைய பிரச்சனைகள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் என 200க்கும் அதிகமான நோய்கள் வரக் காரணமாக உள்ளது.![]()
‘தி இந்து’ podcast-ல் பேசிய மருத்துவர் சிரியக் அபி ஃபிளிப்ஸ், சிறிய அளவு மது அருந்துவது இதயத்திற்கு நல்லது என நீண்ட காலமாக உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. ஆனால், அது உண்மை அல்ல என்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதேபோல் புகைப்பிடிப்பது இருதய நோய், நீரிழிவு, நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படக் காரணமாகிறது. இந்தியாவில் புகையிலையால் ஆண்டுக்கு சுமார் 13 லட்சம் பேர் இறக்கின்றனர். இருப்பினும் புகையிலை உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என WHO குறிப்பிட்டுள்ளது.
எள்ளு உருண்டை சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் எனப் பரவும் தகவல் குறித்து மருத்துவர் பிரவீன் என்பவரை தொடர்புகொண்டு பேசுகையில், 'இது பொய்யான தகவல்' என்றார். மேலும், "ஆல்கஹால் தொடர்பான நச்சுத்தன்மையைப் போக்க எந்த உணவும் உதவாது. மதுவைத் தவிர்ப்பது மட்டும் தான் அதற்கான ஒரே வழி” என விளக்கம் அளித்தார்.
மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கம் உடையவர்கள் தினமும் எள்ளு உருண்டை சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் எனப் பரவும் தகவல் தவறானது. இத்தகைய பொய்யான மருத்துவக் குறிப்புகள் மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் ஊக்குவிக்கவே செய்யும்.
மருத்துவரின் ஆலோசனை இன்றி சமூக வலைத்தளத்தில் மருத்துவக் குறிப்பு என்ற பெயரில் பரவும் தகவல்களை யாரும் பின்பற்ற வேண்டாம்.
முடிவு:
மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கம் உடையவர்கள் எள்ளு உருண்டை சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல.