யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
செப்டம்பர் மாதம் உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தின் ஃபகர்பூர் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இது. இதற்கும் துர்கா பூஜை அன்று நடந்த இளைஞனின் கொலைக்கும் எந்த தொடர்புமில்லை.
பரவிய செய்தி
யோகி ஜி அவர்களின் புல்டோசர் நடவடிக்கைக்கு பிறகான ’பஹ்ரைச்’.
இது தவறு செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்குமென நம்புகிறேன்.

விரிவான விளக்கம்
முஸ்லிம் போன்ற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர்மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் எழுந்தால் மட்டும், அரசு நிறுவனங்கள் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர் சொத்துகளுக்கு ஆக்கிரமிப்பு அகற்ற அறிவிப்பை அனுப்புவது வாடிக்கையாகி வருகிறது. குற்றவியல் நீதி அமைப்பின் அடிப்படையில், அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் வாய்ப்பை வழங்காமல், குற்றம் சாட்டப்பட்டதையே ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி புல்டோசரைக் கொண்டு வீடுகளை இடிக்கிறது அரசு நிறுவனங்கள்.
இப்படி விளிம்புநிலை மக்களின் வீடுகள் அரசால் இடிக்கப்படுவதை பத்திரிகைகள் ’புல்டோசர் ராஜ்’ என்று அழைக்கிறது.
2017ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப் பிரதேசத்தில் வீடுகளை இடிக்கும் இந்த ’புல்டோசர் ராஜ்’ முறையை துவக்கி வைத்தது. பின்பு, இது பாஜக ஆளும் பல மாநிலங்களுக்கும் பரவியது. இப்படி, ’புல்டோசர் ராஜ்’ என்னும் பெயரில் வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது.
இந்தப் பின்னணியில்தான், உத்தரப் பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் என்னும் இடத்தில் துர்கா சிலை ஊர்வலத்தின்போது இரண்டு தரப்புகளுக்குள் ஏற்பட்ட மோதலில், ராம் கோபால் மிஸ்ரா என்ற 22 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு முஸ்லிம்களின் வீடுகளை இடித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ”சோகத்தில் மூழ்கிய வசீர்கஞ்ச்” என்று எழுதப்பட்ட வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ‘வசீர்கஞ்ச்’ என்னும் சொல்லைக்கொண்டு தேடியதில் ‘Bahraich Bulldozer Action’ என்னும் தலைப்பில் ’LokmatHindi’ என்ற யூட்யூப் தளத்தில் ஒரு வீடியோவைக் காணமுடிந்தது.
அந்த வீடியோவின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, இந்த விவகாரம் உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கைசர்கஞ்ச் பகுதியின் சராய் ஜக்னா கிராம பஞ்சாயத்தின் கீழுள்ள வசீர்கஞ்ச் சந்தையில் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் 23 வீடுகள் நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

இந்த தகவலின் அடிப்படையில் தேடியதில், ’செப்டம்பர் 25ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் கைசர்கஞ்சில் உள்ள ஒரு கிராமத்தில் 23 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன’ என்ற The Hindu செய்தியின் மூலமாக மேற்கண்ட தகவலை உறுதிசெய்ய முடிகிறது.
மேலும் தேடியதில், பஹ்ரைச் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அக்டோபர் 19ஆம் தேதியில், இந்த வீடியோ பற்றிய பதிவைக் காணமுடிந்தது. அதில் “காட்டப்பட்ட காட்சிகள், 25.09.24 அன்று பஹ்ரைச் மாவட்டத்தின் ஃபகர்பூர் பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கை. இது சமீபத்தில் நிகழ்ந்த மகாராஜ்கஞ்ச் சம்பவத்தின் காட்சிகள் அல்ல. தவறான பதிவுகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதிலிருந்து மேற்கண்ட வீடியோ செப்டம்பர் மாதம் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இடிக்கப்பட்ட கட்டிடங்களை காட்சிபடுத்துகிறது என்பது தெளிவு.
இதற்கிடையில், மகாராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள 23 வீடுகளை காலி செய்யும்படி கடந்த அக்டோபர் 17ஆம் தேதி பஹ்ரைச் மாவட்ட பொதுப்பணித்துறையின் (PWD) நிர்வாகப் பொறியாளர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் சில நாட்களுக்கு முன்பு ’பஹ்ரைச்’ மோதலில் குற்றம் சாட்டப்பட்டவரான அப்துல் ஹமீது என்பவரின் வீடும் அடங்கும்.
கடந்த அக்டோபர் 13ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் ’பஹ்ரைச்’ என்னும் இடத்தில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது சர்ச்சைக்குரிய பாடல்கள் போடப்பட்டதன் காரணமாக இரண்டு தரப்புகளுக்குள் ஏற்பட்ட மோதலில், ராம் கோபால் மிஸ்ரா என்ற 22 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து முஸ்லிம்களில் ஒருவர்தான் அப்துல் ஹமீது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை நீதிமன்றத்தின் வெளிப்படையான அனுமதி இல்லாமல் இடிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தாலும், இந்த உத்தரவு பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொருந்தாது. ’மாவட்ட சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில், சாலையின் நடுப்பகுதியில் இருந்து 60 அடி தூரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் சட்டவிரோதமானது’ என்று பஹ்ரைச் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, பஹ்ரைச் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி வாங்கிதான் கட்டிடம் கட்டியுள்ளோம் என்று நிரூபிக்க முடியாதவர்களின் வீடுகள் இடிக்கப்படும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இதில் நிர்வாகத்தால் ஆக்கிரமிப்பு என்று அறிவிக்கப்பட்ட 23 வீடுகளில் 19 வீடுகள் முஸ்லிம்களுடையது.
மகாராஜ்கஞ்ச் பகுதியின் இந்தப் பிரச்சனை ஏற்கனவே செப்டம்பர் மாதம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் வீடியோவுடன் இணைத்து தவறாக பரப்பப்படுகிறது.
முடிவு:
துர்கா சிலை ஊர்வலத்தின்போது இளைஞன் கொல்லப்பட்டதற்காக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதாக பரப்பப்படும் செய்தி திரிக்கப்பட்டதாகும். இந்த வீடியோ செப்டம்பர் மாதம் இடிக்கப்பட்ட வசீர்கஞ்ச் சந்தைப் பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.