யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு பின்னர் தனது முதல் அதிகாரப்பூர்வ உருவப்படத்தை திறந்துவைக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
*இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது.
இதற்கான பெரிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.*
*உலகம் முழுவதும் வைரல் செய்யுங்கள்*

விரிவான விளக்கம்
கடந்த ஓராண்டாக இஸ்ரேல் இராணுவம் காஸா பகுதியில் பாஸ்தீனர்கள் மீது இனஅழிப்புப் போரை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 8ஆம் தேதி ‘அல் ஜசீரா’ வெளியிட்டுள்ள செய்தியின்படி 16,756 குழந்தைகள் உட்பட 41,909 பாலஸ்தீன மக்கள் கடந்த ஓராண்டில் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச நாடுகளால் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தங்களை மதிக்காமல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 'ஹமாஸ் அமைப்பை அழித்த பின்னர் இஸ்ரேல் போரை நிறுத்தும்' என்று கூறி இன்றுவரை போரை நடத்திக்கொண்டிருக்கிறார். இதனால் உலகெங்கும் உள்ள ஜனநாயகவாதிகளால் நெதன்யாகு ’போர்க் குற்றவாளி’ என்று கண்டிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகள் நெதன்யாகுவை ’சர்வதேச பயங்கரவாதியாக’ அறிவித்து போஸ்டர் வெளியிட்டதாக சமூக வலைதளமான ’எக்ஸ்’ல் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Grace Arabella Lee’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ காணக்கிடைத்தது. அதில் ‘மன்னர் சார்லஸ் தனது முதல் அதிகாரப்பூர்வமான உருவப்படத்தை திறந்து வைப்பது’ பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வு பற்றி இணையத்தில் தேடியதில், ’Associated Press’ எனும் செய்தி முகமை தனது யூட்யூப் பக்கத்தில், ”மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு பின்னர் தனது முதல் அதிகாரப்பூர்வ உருவப்படத்தை (Portrait) திறந்துவைக்கிறார்” என்று தலைப்பிட்டு இதே வீடியோ கடந்த மே மாதம் பதிவிடப்பட்டிருந்தது.

இந்த உருவப்படத்தை ஜொனாதன் இயோ என்பவர் வரைந்திருக்கிறார். இவர் டோனி பிளேர், சர் டேவிட் அட்டன்பரோ மற்றும் மலாலா யூசுப்சாய் ஆகியோரது உருவப்படங்களையும் வரைந்தவர் என்று BBC செய்தித்தளம் குறிப்பிடுகிறது. ஓவியர் ஜொனாதன் இயோ, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் வெல்ஷ் காவலர்களின் படைச் சீருடையில் இருப்பது போன்ற வரைந்திருந்தார்.
இந்த உருவப்படத்தை மன்னர் மூன்றாம் சார்லஸ் திறந்துவைக்கும் வீடியோவை பல விதங்களில் கேலிக்கையாக எடிட் செய்து சமூக வலைதளங்கள் பரப்பிவருகின்றனர். அதில் சிலவற்றை இங்கே, இங்கே கொடுத்திருக்கிறோம்.
இதிலிருந்து, இந்த வீடியோயில் இருக்கும் மூன்றாம் சார்லஸின் உருவபடத்திற்கு பதிலாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ’மனிதகுலத்திற்கு ஆபத்தான பயங்கரவாதியாக’ அறிவிக்கப்பட்டது போன்ற போஸ்டரை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் எனது உறுதியாகிறது. மேலும், Associated Press செய்தி முகமை இந்த வீடியோவை கடந்த மே மாதம் பதிவிட்டிருப்பதைக்கொண்டு பார்க்கும்போது, இது சமீபத்திய வீடியோ அல்ல என்பதும் உறுதியாகிறது.
முடிவு:
ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ‘சர்வதேச பயங்கரவாதியாக’ அறிவித்தது என்று பரப்பப்படும் செய்தி பொய்யானது. இந்த வீடியோ, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு பின்னர் தனது முதல் அதிகாரப்பூர்வ உருவப்படத்தை திறந்துவைக்கும்போது எடுக்கப்பட்டது.