யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரப்பப்படும் இந்த நேர்காணல் போலியானது என்று அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
"கூலி படத்தில் நடிச்சு தப்பு பண்ணிட்டேன். இந்த படத்தில் என் கதாபாத்திரம் என்னனு எனக்கே தெரியலை. இனி வருங்காலத்தில் இந்த மாதிரி படம் பண்ண மாட்டேன்" - அமீர் கான்.



விரிவான விளக்கம்
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்த ’கூலி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஒரேயொரு காட்சியில் மட்டும் வரும் Cameo role-ல் அமீர்கான் நடித்திருந்தார். இந்த படம் பற்றிய எதிர்மறையான கருத்துகள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டன. குறிப்பாக தர்க்க ரீதியான குறைபாடுகள் (Logic Mistakes) அதிகம் இருப்பதாகவும், எந்தவொரு கதாப்பாத்திரமும் அதன் நோக்கமும் சரியாக எழுதப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
"Doing #Coolie was a BIG MISTAKE"
~ Mr Perfectionist #AamirKhan is now regretting his decision. pic.twitter.com/HjFboWkwGA
இந்நிலையில், ”ரஜினி சாருக்காக தான் இந்த படத்தில் நான் நடித்தேன். உண்மையைச் சொன்னால், இந்த படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் என்னவென்று கூட எனக்கு தெரியாது. கூலி படத்தில் நடித்து தவறு செய்துவிட்டேன். இனி வருங்காலத்தில் இந்த மாதிரி படத்தில் நடிக்கமாட்டேன்” என்று அமீர்கான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்ததாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது.
Aamir khan about his cameo in #Coolie 😶 pic.twitter.com/fmrpE6hUmE
இதனை ’Blue Sattai Maran’ போன்ற சமூக வலைத்தள பிரபலங்களும் இதனை பகிர்ந்து வருகிறார்கள்.
தலீவர் ஒரு சுயநலவாதி. தன் படங்கள் பான் இண்டியா ஹிட்டாக மற்ற மாநில பிரபலஙீகளை டம்மி ரோலில் நடிக்க வைத்து ஹைப் ஏற்றுவார்.
ஆனால் இவர் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க மாட்டார்.
ரஜினி சாருக்காக.. கதை கேட்காமல் நடித்த அமீர் கான் இப்போது புலம்புகிறார்.
இதை மற்ற பிரபலங்களும் உணர… pic.twitter.com/xgd7GieGQn
உண்மை என்ன?
அமீர்கான் ’கூலி’ திரைப்படம் குறித்து இவ்வாறாக கருத்து கூறியிருப்பது குறித்து இணையத்தில் தேடினோம். பரப்பப்படும் கூற்றை அமீர்கான் கூறியதாக எந்தவொரு மைய நீரோட்டம் (Mainstream) ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளதை காணமுடியவில்லை.
மேலும் தேடியதில், அமீர்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘Aamir Khan Productions’ அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் இது குறித்த ஒரு விளக்கத்தை வெளியிட்டிருந்தது. அதில், ‘கூலி திரைப்படம் தொடர்பாக அமீர்கான் எந்த நேர்காணலும் கொடுக்கவில்லை. அமீர்கான் கூலி திரைப்படத்தை விமர்சிப்பது போல் போலியான நேர்காணல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதுவொரு போலியான நேர்காணல்’ என்றும் ‘இன்னும் அமீர்கான் கூலி திரைப்படத்தை பார்க்கவே இல்லை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமீர்கானின் தயாரிப்பு நிறுவனமான ’AKP’-ன் இந்த விளக்கத்தை ஆதாரமாகக் கொண்டு, ’INDIA TODAY’ போன்ற செய்தித்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, கூலி திரைப்படத்தை விமர்சனம் செய்தி அமீர்கான் நேர்காணல் கொடுத்ததாக பரப்பப்படும் செய்தி போலியானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
அமீர்கான் கூலி திரைப்படத்தை பற்றி விமர்சனம் செய்து நேர்காணல் கொடுத்தது போன்று போலியான செய்தி பரப்பப்படுகிறது. இந்த நேர்காணல் போலியானது என்று அமீர்கானின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.