யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த இரண்டாண்டுகளில் மட்டுமே தமிழ்நாடு காவல்துறையினர் குறிப்பிடத்தக்க அளவு மெத்தாபிடமைன், ஹராயின் போன்ற செயற்கை போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
பரவிய செய்தி
”தமிழ்நாடு காவல்துறையினர் போதைப்பொருளை பிடிப்பதில்லை”
தமிழ்நாட்டில் மத்திய துறையினர் பல கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றுகின்றனர்;
மாநில காவல்துறையினர் கஞ்சா தவிர பிற போதைப் பொருளை ஒரு கிராம் கூட கைப்பற்றியதாக தகவல் இல்லை.

விரிவான விளக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளூர் மன்றங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதை ஒழிப்பு கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ”மத்திய முகமைகள் (Central Agencies) போல் விலை உயர்ந்த செயற்கை போதைப் பொருட்களை (Synthetic Drugs) தமிழ்நாடு காவல்துறை கைப்பற்றுவதில்லை. அவர்கள் பெரும்பாலும் கைப்பற்றியது கஞ்சாதான். ஆனால், அவர்களால் ஹெராயின், ஓப்பியம் போன்ற செயற்கை போதைப்பொருட்களை ஒரு கிராம் அளவில் கூட கைப்பற்ற முடிவதில்லை” என்று பேசியிருந்தார்.

உண்மை என்ன?
ஆளுநர் பேசிய இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை சரி பார்க்க நாங்கள், தமிழ்நாடு காவல்துறை இதுவரை ஹெராயின், ஓப்பியம், மெத்தம்ஃபெடமைன் போன்ற செயற்கை போதைப் பொருட்களை கைப்பற்றியது பற்றிய செய்திகளையும், அறிக்கைகளையும் தேடினோம். அதன்மூலமாக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை உள்ள இரண்டாண்டுகளில் காவல்துறை செயற்கை போதைப் பொருட்களை கைப்பற்றியது குறித்த விவரங்களை காணமுடிந்தது.
ஜீலை 6, 2022 அன்று ’ETV Bharat’ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பல்லாவரம் அருகில் ஹெராயின் விற்பனையில் ஈடுபட்ட ஒரு கும்பலை காவல்துறை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 60 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஜீலை மாதம் ’The Hindu’ ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2024 ஜீன் மாதம் கோயம்புத்தூர் போலீஸார் ஆறு இளைஞர்களை கைது செய்ததோடு, 102 கிராம் மெத்தம்ஃபெடமைன் தூள் மற்றும் 1.2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், 12.08.2024 அன்று ’செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை’யின் படி, ’கடந்த ஆண்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14,770 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 23,364 கிலோ கஞ்சா, 0.953 கிலோ ஹெராயின், 1239 கிலோ மற்ற போதைப் பொருட்கள் (மெத்தம்ஃபெடமைன், ஆம்பிடாமைன், மெத்தாகுலான்) கைப்பற்றப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து ஆளுநர் கூறியதற்கு மாறாக, தமிழ்நாடு காவல்துறை கடந்த இரண்டாண்டுகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவு Synthetic Drugs என்று சொல்லப்படக்கூடிய செயற்கை போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளது.
முடிவு:
’தமிழ்நாடு காவல்துறை கஞ்சா தவிர பிற போதைப் பொருளை ஒரு கிராம் கூட கைப்பற்றியதாக தகவல் இல்லை’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது தவறானது. காவல்துறையினர் மெத்தம்ஃபெடமைன், ஹெராயின் போன்ற செயற்கை போதைப்பொருட்களை இதற்கு முன்பு கைப்பற்றியுள்ளனர்.