யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது கும்பமேளாவில் நடக்கவுமில்லை, பிபிசி-யும் ஆவணப் படம் வெளியிடவுமில்லை.
பரவிய செய்தி
பிரயாக்ராஜ் பிரேக்கிங்.... பிரயாக்ராஜ் மகா கும்பமேளா-2025க்கு வந்த ஒரு துறவி கங்கையில் குளிப்பதற்கு முன்பு நெருப்பில் குளிப்பதைப் பார்த்த பிறகு பிபிசி நிருபர் தூக்கத்தை இழந்தார். பிபிசி நேற்று தனது சேனலில் அதை ஒளிபரப்பியது.

விரிவான விளக்கம்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்ளும் நிலையில், இந்த கும்பமேளாவில் நிகழ்ந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் நெருப்பில் குளிப்பதைப் பார்த்த பிபிசி செய்தியாளர் அதனைச் செய்தியாக வெளியிட்டு இருப்பதாக வீடியோ குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்னர் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டதாகக் கூறியும் பரப்பப்பட்டுள்ளது.
சிவன் இருக்கிறார் என்று
சொல்லி தீயில் படுத்து
எந்திரிப்பவரை BBC டீம் சந்தித்து
அவரின் உடைகளை கெமிக்கல்
டெஸ்ட் செய்து விறகு கட்டைகளை
டெஸ்ட் செய்து தீயின் மீது படுக்க
வைத்து எடுத்த காட்சிகள்
ஆனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை அதிர்ந்துபோன
["BBC டீம்"]
அந்த முக்கியமான காட்சிகள்
இதோ pic.twitter.com/zQU3CAtowD
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், 2011 மார்ச் 23ம் தேதி ‘Narsimhadev’ என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 9 நிமிடம் கொண்ட அந்த வீடியோவிற்கு ‘The Fire Yogi’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
அந்த தலைப்பினை கொண்டு மேற்கொண்டு தேடியதில், சுமார் 46 நிமிடம் கொண்ட அதன் முழு வீடியோ கிடைத்தது. இதனை 2011, நவம்பர் மாதம் ‘rudrAgni’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த முழு வீடியோவின் 21வது நிமிடம் 30வது வினாடியில் பரவக் கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மைக் வாசன் (Mike Vasan) என்பவர் இயக்கிய இந்த ஆவணப் படத்தின் DVD அமேசான் தளத்தில் விற்பனைக்குள்ளது. அதில் DVD வெளியீட்டுத் தேதி 2007, அக்டோபர் 16 என்றுள்ளது. அதிலும் பிபிசி பற்றி எந்த குறிப்பும் இல்லை.

பிபிசி தயாரித்து அமேசானில் விற்கப்படும் ஆவணப்பட DVD-யின் தலைப்பிலும், அட்டைப்படத்திலும் ‘BBC’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ராம்பாவ் பற்றிய DVD-யில் அப்படி எதுவும் இடம்பெறவில்லை. இதிலிருந்து இந்த ஆவணப்படத்தை பிபிசி வெளியிடவில்லை என்பதை அறிய முடிகிறது.
ராம்பாவ் நெருப்பில் படுப்பது குறித்து ’Aaj Tak’ ஊடகத்தில் 2009, நவம்பர் மாதம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவரது தோல் நேரடியாக நெருப்பைத் தொடவில்லை என்றும், அதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் குறித்தும் தோல் மருத்துவர் டாக்டர் ஷெஹ்லா அகர்வால் விளக்கியுள்ளார்.
இந்த தீ சடங்கு ஒரு 'மாயை' என மருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் கூறுவது 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
இவற்றிலிருந்து இது கும்பமேளாவில் நடந்தது இல்லை என்பதையும், இதனை ஆவணப் படமாக பிபிசி எடுக்கவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு :
தீயில் படுத்து எழும் முதியவரின் வீடியோவினை மகா கும்பமேளாவில் எடுக்கப்பட்டது என்றும் பிபிசி ஆவணப்படம் என்றும் பரவும் தகவல் தவறானது. இந்த ஆவணப்படத்தை 2007ம் ஆண்டு மைக் வாசன் என்பவர் இயக்கியுள்ளார். இது ஒரு மாய வித்தை என அன்றைய தேதிகளிலேயே பலர் விளக்கம் அளித்துள்ளனர்.