யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் பேசிய வீடியோவை அரசுப் பள்ளியில் பேசியதாகத் தவறாகப் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
திருச்செந்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்னே தைரியமாய் இரு என்ற பெயரில் இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்ய பாத்திமா சபரிமாலா அவர்களை ஏற்பாடு செய்தது பள்ளிக்கல்வித்துறையா இல்லை எனில் நடவடிக்கை என்ன மாண்புமிகு அன்பில் மகேஷ் அவர்களே. (மறைமுக ஹிஜாப் பிரச்சாரம்)

விரிவான விளக்கம்
சில தினங்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி ஒன்றில் மகாவிஷ்ணு என்பவர் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியமே இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கிறோம் என்கிற வகையில் பேசி இருந்தார். இக்கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு இந்துத்துவவாதிகள் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், பாத்திமா சபரிமாலா என்பவர் அரசுப் பள்ளியில் ‘பெண்னே தைரியமாய் இரு’ என்ற பெயரில் இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்வதாக வீதியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
அந்த வீடியோவில், “பெண்மை என்பது பேராற்றல். அதில் உள்ள தியாகம் என்பது அதைவிட மிகப்பெரிய பேராற்றல். அதை உளத்தூய்மையோடு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நேர்மையாக இருப்பேன். ஹலாலாக இருப்பேன் என வாழும் போது இறைவன் தரக்கூடிய பரிசு மிகப்பெரியது” என பாத்திமா சபரிமாலா சொல்கிறார். மேலும், இஸ்லாம் பெண்களுக்கான அத்தனை உரிமையும் கொடுத்தது. ஆனால், அது அனைவரையும் உண்மையில் சென்று சேர்ந்ததா என்பதில் தான் சிக்கல் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
உண்மை என்ன?
பெண்களின் பாதுகாப்பு குறித்து ‘பெண்னே தைரியமாயிரு’ என்கிற தலைப்பில் பாத்திமா சபரிமாலா தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான பதிவுகள் அவரது சமூக ஊடக பக்கத்திலேயே காண முடிகிறது.
பரவக்கூடிய வீடியோ குறித்துத் தேடியதில், அது இராமநாதபுரம் நத்தம் கிராமத்தில் பேசியது என்பதை அறிய முடிந்தது. இந்நிகழ்வு நடந்தது அரசுப் பள்ளி கிடையாது. முஸ்லிம் பெண்கள் மத்தியில் அவர் பேசிய முழு வீடியோ ‘அழகிய முன்மாதிரி’ என்கிற யூடியூப் பக்கத்திலுள்ளது.
நத்தம் பகுதியில் இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பல்வேறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் வயதான பெண்கள் இருப்பதைக் காண முடிகிறது. இதிலிருந்து இது பள்ளியில் பேசப்பட்ட வீடியோ கிடையாது என்பது உறுதியாகிறது.
திருச்செந்தூரில் உள்ள ஆத்தூரில் அரசுப் பள்ளியில் பாத்திமா சபரிமாலா பேசிய வீடியோவும் அவரது யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில் அவர் மதம் சார்ந்த கருத்துக்கள் எதுவும் பேசவில்லை. இருப்பினும் இது தொடர்பாக யூடர்னில் இருந்து அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.
பள்ளிகளில் தான் ஒரு இடத்தில் கூட மதரீதியாகப் பேசவில்லை என்றும் மதராசாவிலும் முஸ்லிம் பெண்களுக்கு மத்தியில் பேசும்போது மட்டுமே மத விஷயங்கள் பேசினேன் என்று அவர் விளக்கம் அளித்தார்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மதம் மற்றும் மதம் சாராத என இரண்டு இடங்களிலும் பாத்திமா சபரிமாலா பேசி வருகிறார். அப்படி மதம் சார்ந்த இடத்தில் பேசிய வீடியோவை அரசுப் பள்ளியில் பேசியதாகத் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
திருச்செந்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் பாத்திமா சபரிமாலா மத பிரச்சாரம் செய்வதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது இராமநாதபுரம் நத்தம் பகுதியிலுள்ள முஸ்லிம் பெண்களிடம் பேசிய விடியோ. அரசுப் பள்ளியில் மதம் சார்ந்த கருத்துக்களை அவர் பேசவில்லை.