யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது தமிழ்நாட்டில் வழக்கமாக நடந்துவந்திருக்கிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கடந்த மார்ச் 30ஆம் தேதி தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ’யுகாதி’ எனப்படும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்குத் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்டை மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டிற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அளிக்கப்படுகிறது, ஆனால் தமிழ்ப் புத்தாண்டிற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அளிக்கப்படவில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட ‘Ghibli Art’ படம் ஒன்று நாம் தமிழர் ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
எப்டுறா !!!! 🤣😂 இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி எங்க அது? ....#திராவிடயுகாதி_தமிழ்நாட்டில்அநீதி pic.twitter.com/2neKYoeCIG
உண்மை என்ன?
2025-ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறைகள் குறித்து இணையத்தில் தேடியதில், இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அரசாணையைக் காண முடிந்தது. அதில், ஏப்ரல் 14ஆம் தேதி ’தமிழ்ப் புத்தாண்டு /டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்’ என்று குறிப்பிடப்பட்டு விடுமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2024ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறைகள் குறித்த அரசாணையிலும் ஏப்ரல் 14ஆம் தேதி அரசு விடுமுறை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை வெளியிட்டு அறிவித்தது. பின்னர் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதனைத் திரும்பப்பெற்று சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தது. அதன்படி இன்றும் சித்திரை ஒன்றாம் நாள் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ் அறிவு மரபினரால் ஆணித்தரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது குறித்து 'YouTurn' தளத்தில் ஏற்கனவே கட்டுரை எழுத்தப்பட்டுள்ளது.
இதிலிருந்து, ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவது தமிழ்நாட்டில் வழக்கமாக நடந்துவந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
முடிவு:
தமிழ்நாட்டில் தெலுங்கு வருடப் பிறப்பான ’யுகாதி’ பண்டிகைக்கு விடுமுறை விடுவது போன்று தமிழ்ப் புத்தாண்டிற்கு பொது விடுமுறை விடப்படுவதில்லை என்று பரப்பப்படுவது தவறான தகவலாகும். மேலும், ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதே தமிழ் அறிவு மரபினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று' என்றும் தெரிகிறது.
