யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவில் இளைஞரை கடுமையாக தாக்குவது தமிழ்நாடு போலீஸ் என்று தவறாகப் பரப்பப்படுகிறது. இரயில் நிலையத்தில் போதையில் அலம்பல் செய்த இளைஞர் ஒருவரை இரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர் ஒருவர் பிடித்து கொடூரமாக தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
ஸ்டாலின் முதல்வராக இருக்கும் வரை உடன்பிறப்புகள் யாரும் காவல் துறையை கண்டு கடுகு அளவு அஞ்ச மாட்டார்கள்.
விரிவான விளக்கம்
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு காவலர் ஒருவருடன் பரபரப்பு சம்பவம் என்பது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் காவலர் ஒருவர் இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்குவதை தெளிவாகக் காண முடிகிறது.
#DMKDestroyedTN https://t.co/ZfAfP9iVD1
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 16, 2026 அன்று நடைபெற்ற சம்பவம் என்பதை அறிய முடிந்தது.
“Thanthi TV” யூடியூப் பக்கத்தில், பரவி வரும் வீடியோவில் உள்ள அதே காட்சிகளைக் கொண்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், இரயில் நிலையத்தில் போதையில் அலம்பல் செய்த இளைஞர் ஒருவரை இரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர் ஒருவர் பிடித்து கொடூரமாக தாக்கியதாகக் கூறி குறிப்பிட்டிருந்தனர்.
இதே போன்று, “Polimer News“ யூடியூப் பக்கத்திலும் பிப்ரவரி 16, 2026 அன்று “இளைஞனை கீழே தள்ளி பளார் விட்ட RPF வீரர்.. அதிர்ச்சி வீடியோ“ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தனர்.
இதன் மூலம் இந்த வீடியோவில் அந்த இளைஞரை கடுமையாக தாக்குவது தமிழ்நாடு போலீஸ் அல்ல, இரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர் என்பது தெளிவாகிறது. மேலும் இரயில்வே பாதுகாப்பு படை (RPF) என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாகும்.
முடிவு:
நம் தேடலில், ரயில் நிலையத்தில் இளைஞரை கடுமையாக தாக்கும் தமிழ்நாடு போலீஸ் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.