யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அலுவலகத்தில் சிகரேட் பாக்கெட் வைத்திருந்ததாக கூறி தௌபீக் என்பவரை ராஜினாமா செய்ய சில இளைஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
பரவிய செய்தி
இந்துக்களே கவனமாகப் பாருங்கள். அதைச் செய்வதற்கு முன் அவர்கள் ஜாதியைக் கேட்கவில்லை. நீங்கள் இந்து, அவர்களுக்கு இதுவே போதும். பங்களாதேஷில் ஒரு இந்து ஆசிரியர் ஒருமுறை அவர் கற்பித்த முஸ்லீம் மாணவர்களால் அவமதிக்கப்பட்டார் மற்றும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும், பங்களாதேஷில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடுமாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள்.

விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டுத் திருத்தத்திற்கு எதிராக ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து தப்பித்தார். பிறகு இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகப் பேராசிரியர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் தொடர்ந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் பணியில் உள்ள இந்துக்களை மிரட்டிக் கட்டாயப்படுத்தி வேலையை ராஜினாமா செய்யச் சொல்வதாகவும் விடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
இந்துக்களே கவனமாகப் பாருங்கள். அதைச் செய்வதற்கு முன் அவர்கள் ஜாதியைக் கேட்கவில்லை. நீங்கள் இந்து, அவர்களுக்கு இதுவே போதும். பங்களாதேஷில் ஒரு இந்து ஆசிரியர் ஒருமுறை அவர் கற்பித்த முஸ்லீம் மாணவர்களால் அவமதிக்கப்பட்டார் மற்றும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒவ்வொரு… pic.twitter.com/bQMBLwxK0G
— K.Ashok adv (@ashok777_kalam) August 21, 2024
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோ குறித்துத் தேடியதில், இதுதொடர்பாக ‘bd news24’ என்ற தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றைக் காணமுடிந்தது. பெங்காலி மொழியில் இருந்த அக்கட்டுரையை கூகுள் டிரான்ஸ்லெட் உதவியுடன் மொழிபெயர்த்துப் படித்தோம்.
இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை (19ம் தேதி) வங்கதேசத்தில் உள்ள Chapainawabganj நகராட்சி அலுவலகத்தில் நடந்துள்ளது. அவ்வலுவலகத்தில் தௌபீக் இஸ்லாம் என்பவர் நிர்வாக பொறியாளராக பணிபுரிகிறார். திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் சிலர் தௌபீக் அலுவலகத்தில் சிகரேட் பாக்கெட் வைத்திருந்ததற்காக வேலையை ராஜினாமா செய்ய வேண்டுமென ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் வற்புறுத்தலைத் தொடர்ந்து அவரும் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
அந்த இளைஞர்கள் Anti-discrimination மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இளைஞர்கள் தௌபீக் இஸ்லாம் என்பவரைத்தான் வேலையை ராஜினாமா செய்ய வற்புறுத்துகின்றனர். எனவே இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதாக தெரிகிறது. ஆனால், இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் எனத் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
முடிவு:
இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை ராஜினாமா செய்யச்சொல்லி வங்கதேசத்தில் கட்டாயப்படுத்தப்படுவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. வீடியோவில் இருப்பவரின் பெயர் தௌபீக் இஸ்லாம். இவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.