யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பரவிய செய்தி
திரு பாரதிராஜா அவர்களது உயிரிழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் அவரது ஆன்மா சாந்தி அடையவும் அந்த ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.


விரிவான விளக்கம்
தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான இயக்குநர் பாரதிராஜா. சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாரதிராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், பாரதிராஜா இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரால் பரப்பப்பட்டு வருகிறது.
திரு பாரதிராஜா அவர்களது உயிரிழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் அவரது ஆன்மா சாந்தி அடையவும் அந்த ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன் 🙏 pic.twitter.com/RIh9EcPEN5

உண்மை என்ன?
இயக்குநர் பாரதிராஜா குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக செய்திகளில் தேடினோம். ‘ETV Bharat தமிழ்நாடு’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியை காணமுடிந்தது.
அதில், 'மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாரதிராஜாவின் மகள் ஜனனி தெரிவித்துள்ளதாகவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ள 'MGM Healthcare' மருத்துவமனை சார்பிலும் விளக்கமளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில், ‘மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவிற்கு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதுடன் மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘Times of India’ நிறுவனம் நடத்தி வரும் ‘Chennai Times’ என்ற செய்தித்தளம் மேற்கூறிய மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மருத்துவமனை அறிக்கை ஜனவரி 3ஆம் தேதி 'MGM Healthcare' மருத்துவமனையால் வெளியிடப்பட்டுள்ளது. 'MGM Healthcare' மருத்துவமனையால் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, பாரதிராஜா இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பரப்பப்படுவது வதந்தி என்பது தெளிவாகிறது.
முடிவு:
மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா இறந்துவிட்டதாக பொய்யான தகவல் சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.