யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த படத்தில் இருப்பவர் வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர். இவரோ, தற்போதுள்ள தலைவரோ இப்படி இந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. புதிய தலைமுறையும் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை. இது போலியாக உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
வக்ஃ போர்டுக்கு சொந்தமான சிக்கந்தர் மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி வெட்டி 'சமபந்தி' விருந்து வைத்து சமூகநல்லிணக்கம் பேணப்படும். விரைவில் இதற்காக மதசார்பற்ற இயக்கங்களுடன் சேர்ந்து ஆட்சியரிடமும்,முதலமைச்சரிடமும் மனு அளிக்க உள்ளோம்

விரிவான விளக்கம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் வேண்டுதலின் அடிப்படையில் கந்தூரி எனப்படும் ஆடுகளைப் பலியிடும் வழக்கம் நீண்ட காலமாக இஸ்லாமியர்களிடையே பின்பற்றப்படுகிறது. இந்த மலைப்பகுதியில் முருகன் கோவிலும், காசி விஸ்வநாதர் கோவிலும் இருப்பதால் இந்த சடங்கினை செய்யக் கூடாது என இந்துத்துவா அமைப்பினர் தொடர் சர்ச்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வக்ஃப் வாரிய தலைவர் சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்ததாக புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய நியூஸ் கார்டின் எழுத்துரு, வடிவம் போன்றவை புதிய தலைமுறை கார்டில் இருந்து மாறுபட்டு இருந்ததை காண முடிகிறது. எனவே, இப்படி ஏதேனும் நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என அவர்களது அதிகாரப் பூர்வ பக்கங்களில் ஆய்வு செய்தோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (19-09-2024) காலை 11 மணியளவில் நடைபெற்ற வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
மிக முக்கியமான… pic.twitter.com/Kbf7HuTlEh
மேற்கொண்டு பரவக் கூடிய கார்டில் உள்ள புகைப்படம் குறித்து தேடியதில், அவர் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரகுமான் என்பதை அறிய முடிந்தது. தற்போது ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வக்ஃப் வாரியத்தின் தலைவராக உள்ளார்.
நவாஸ் கனியும் பரவக் கூடிய நியூஸ் கார்டில் இருப்பது போன்று எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. “நான் மற்ற மத சகோதரர்களுக்கு எதிரானவன் அல்ல” என நவாஸ் கனி பேசியது தான் கடந்த 8ம் தேதி புதிய தலைமுறையில் நியூஸ் கார்டாக வெளியிடப்பட்டுள்ளது.
#NEWSUPDATE | “நான் மற்ற மத சகோதரர்களுக்கு எதிரானவன் அல்ல” ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி #NavasKaniMP | #Thiruparankundram | #ThiruparankundramHill | #SikandarDargah pic.twitter.com/zOFyKaUzM5
இவற்றிலிருந்து பரவக் கூடிய நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பல பொய் செய்திகள் பரப்பப்படுகிறது. எச்.ராஜா போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் வதந்திகளை பரப்புகின்றனர்.
முடிவு:
வக்ஃப் வாரிய தலைவர் சிக்கந்தர் தர்கா விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. இந்த படத்தில் இருப்பவர் வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர். இவரோ, தற்போதுள்ள தலைவரோ இப்படி இந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. புதிய தலைமுறையும் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை. இது போலியாக உருவாக்கப்பட்டது.