யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோவில் இருப்பது முன்னாள் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அல்ல.
பரவிய செய்தி
தன்னை மீறி அடிமை அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தமிழ்நாடு பாஜக படுதோல்வி அடைந்து நாசமாய் போக மிளகாய் அரைத்து ஊற்றி அபிஷேகம் செய்து கொண்ட அண்ணாமலை.

விரிவான விளக்கம்
பக்தியின் பெயரில் மிளகாய் கரைசலை ஒருவர் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்யும் செய்திக்காட்சியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, ’இவ்வாறு மிளகாய் அபிஷேக வழிபாடு செய்வது முன்னாள் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை’ தான் என்று பரப்புகிறார்கள். ஒரு சாரார், அண்ணாமலை தனது விருப்பத்திற்கு மாறாக பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பிடிக்காமல், வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தோல்வியடைய வேண்டுமென்று இந்த வழிபாட்டை நடத்தியதாகவும்; மற்றொரு சாரார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று அண்ணாமலை முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று வேண்டி இந்த வழிபாட்டை அவர் செய்ததாக பரப்புகிறார்கள்.
தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வருகிற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று தங்கள் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்றும். தனக்கு
வரமிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து முருகனை மனமுருகி வேண்டிய… pic.twitter.com/vrjv2T46RL
உண்மை என்ன?
இந்த சமூக வலைத்தளப் பதிவுகள் முதல் பார்வைக்கே எல்லல் தொனியில் இருப்பதை காண்கிறோம். இருப்பினும், நாம் இந்த வீடியோவின் keyframe-களை கொண்டு தேடியதில், ’V தமிழ் டிஜிட்டல்’ என்ற இணைய செய்தித்தளத்தில் இந்த செய்தியைக் காணமுடிந்தது.

அதில், “கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சென்னைப் பெரும்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் உள்ள வள்ளி - தெய்வயானை வெற்றிவேல் முருகன் கோவிலில், மிளகாய் பொடியை அறைத்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில் எங்கும் அந்த வழிபாட்டை செய்தவர் முன்னாள் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை என்று குறிப்பிடப்படவில்லை.

இதே செய்தி ’தந்தி டிவி’ யூடியூப் தளத்திலும் காணக்கிடைத்தது. அதில், 1500 லிட்டர் மிளகாய்ப் பொடி கரைசல் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டதோடு, 50 அடி உயரத்தில் இரண்டு அலகு குத்தியும் வழிபாடு நடத்தப்பட்டதாகவும்’ குறிப்பிடப்படுகிறது. இதிலும், அண்ணாமலை இந்த வழிபாட்டை செய்ததாக எந்த குறிப்பும் இல்லை.
மேலும், இந்த வீடியோவில் மிளகாய்ப் பொடி அபிஷேகம் செய்யப்படும் நபரின் முகத்தை நாம் கவனித்தால் அது அண்ணாமலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
முடிவு:
இந்த வீடியோவில் இருப்பது முன்னாள் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அல்ல. அண்ணாமலை மிளகாய் பொடியை கரைத்து அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தியதாக ‘பகடியாக (Sarcasm)’ பரப்பப்படுகிறது.