யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், நீலக் கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடுசெய்யும் எனவும் மாநகராட்சி ஆணையர் விளக்கம்.
பரவிய செய்தி
சபாஷ்..... இயற்கையான கடற்கரையை கூட காசு கொடுத்து பார்க்க வேண்டிய சூழ்நிலையில் சமூகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது பார்த்தீர்களா?! @mkstalin இதுதான் உங்கள் திராவிட மாடலின் லட்சணம்மா டாடி சார்?!

விரிவான விளக்கம்
மக்கள் அதிக அளவில் கூடும் புகழ்பெற்ற இடங்களுக்குச் சுற்றுச்சூழல் அங்கீகாரமான (புளூ லேபிள்) நீலக்கொடி வழங்கப்படும். அந்த வகையில், மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் நீலக்கொடி சான்றிதழ் மெரினாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நீலக்கொடி கடற்கரை திட்டத்தின்கீழ், 6 கோடி மதிப்பில் கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த பிறகு, மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என சில ஊடகங்களிலும், சமூலவலைதளங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன.
சபாஷ்.....
இயற்கையான கடற்கரையை
கூட காசு கொடுத்து பார்க்க
வேண்டிய சூழ்நிலையில் சமூகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது பார்த்தீர்களா?!@mkstalin இதுதான் உங்கள் திராவிட மாடலின் சார்?! pic.twitter.com/b44vpeUZKz
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டில் தேதி 15-04-2025 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. NewsTamil 24x7 அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இது குறித்துத் தேடினோம். அதில் இதுபோன்ற NewsCard ஏதும் பார்க்கமுடியவில்லை. இதையடுத்து NewsTamil 24x7 ஊடகத்தைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த செய்தியை தாங்கள் வெளியிட்டதாகவும், அது தவறானது என்று தெரிந்தவுடன் நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் TIMES OF INDIA செய்தித்தாளில் வந்ததன் அடிப்படையில் தான், தாங்கள் அந்த செய்தியை வெளியிட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்துத் தேடிய போது, ஊடகங்களுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அளித்த விளக்கம் ஒன்று கிடைத்தது. அதில் மெரினா கடற்கரைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என்றும், நீலக் கொடி கடற்கரை திட்டம் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் எனவும் விளக்கமளித்தார்.
#BREAKING | மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது-வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர்!#SunNews | #MarinaBeach | @chennaicorp | @kgbias pic.twitter.com/7rBYL7Os6g
அதே போல் பரவி வரும் செய்தியில், கோவளம் கடற்கரையைப் போல் மெரினாவிலும் நுழைவு கட்டணம் என்று கூறப்பட்டிருந்தது. கோவளம் கடற்கரையில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதா என்று தேடிய போது, NewsTamil 24x7 ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில் கோவளம் கடற்கரை ஊராட்சி பகுதியில் வருவதால் பராமரிப்பு பணிகளுக்காகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்திருந்தார்.
#NewsUpdate | மெரினா செல்ல கட்டணம் வசூல்? - சென்னை மாநகராட்சி விளக்கம்#Chennai #MarinaBeach #Marina #TamilNews #NewsTamil24X7 pic.twitter.com/ga2OFpMkzw
முடிவு :
சென்னை மெரினா கடற்கரையில் இனி நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் எனப் பரவும் செய்தி தவறானது.