யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகளை கொட்டி தனியார் கட்டுமான நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
சென்னையில் கூவம் ஆறுகளை அக்கிரமிப்பு செய்யும் தனியார் நிறுவனம் அதற்கு துணை சொல்லும் திராவிடம் மாடல்.

விரிவான விளக்கம்
சென்னை, எழும்பூர் அருகே உள்ள கிரீம்ஸ் ரோடு கூவம் ஆற்றை CASAGRAND என்ற கட்டுமான நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து, கட்டுமான கழிவுகளை நிரப்பி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டப்போவதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது. தனியார் நிறுவனத்தின் இந்த ஆக்கிரமிப்புக்கு தமிழ்நாடு அரசு துணைபோவதாகவும் அப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் கூவம் ஆறுகளை அக்கிரமிப்பு செய்யும் தனியார் நிறுவனம் அதற்கு துணை சொல்லும் திராவிடம் மாடல். #பார்த்ததில்_பிடித்து_பகிர்ந்தது pic.twitter.com/wMHlGMxKYZ
— சுரேஷ் காங்கேயன் (@SureshKangayan) July 19, 2024
’சென்னை கிங் பாலா’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பதிவிடப்பட்ட இந்த வீடியோவை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
உண்மை என்ன?
பரவி வரும் தகவல் குறித்து இணையத்தில் தேடினோம். சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை ஈரடுக்கு மேம்பாலம் கட்டுவது தொடர்பாக ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்தில் 2021, ஆகஸ்ட் மாதம் கட்டுரை ஒன்று வெளியாகி இருப்பதை காணமுடிந்தது.

கடந்த திமுக ஆட்சியில் (2010) ரூ.1,815 கோடி செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்கள் அமைக்கப்பட்டன. ஆனால், 2011ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி கைவிடப்பட்டது.
இந்நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இதன் வழித்தடத்தை மாற்றி ஈரடுக்கு பாலமாக சுமார் ரூ.5,800 கோடி செலவில் கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே முன்னதாக கூவம் ஆற்று பகுதியில் கட்டப்பட்ட 17 தூண்களை அகற்றும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடந்த மே மாதம் ’தி இந்து’ தளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இவற்றில் இருந்து கூவம் ஆற்று பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பது அறியமுடிகிறது.
அதே நேரத்தில் தூண்கள் இடிக்கப்படும் பகுதியில் வெளியில் இருந்து கட்டுமான கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்படுவதாக விகடனில் கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக Google earth மூலம் அப்பகுதியில் கட்டுமான கழிவு கொட்டப்பட்டதா என வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்தோம்.

அப்படி, 2022, டிசம்பர் மற்றும் 2024, மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்ட செயற்கை கோள் படங்களை ஒப்பிட்டு பார்க்கையில், சில இடங்களில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதை காணமுடிந்தது. புதிய தூண்கள் கட்டியதும் இக்கட்டுமான கழிவுகள் அகற்றப்பட்டு விடும் என அவ்விடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்ததாக விகடனில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்நிலையில் இவ்வாறாக கட்டிடக்கழிவுகளை தற்காலிகமாக கொட்டிவைக்க உரிய துறையில் முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
முடிவு:
கூவம் ஆற்றில் கட்டிடக் கழிவுகளை கொட்டி தனியார் நிறுவனமான CASAGRAND ஆக்கிரமிப்பு செய்வதாகவும் அதற்கு தமிழ்நாடு அரசு துணைசெல்வதாகவும் பரவும் தகவல் உண்மை அல்ல. அது சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை அமைக்கப்படும் ஈரடுக்கு பாலம் தொடர்பான பணி.