யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ரெக்கையா மாலிக், ராஜாத்தி ஆகியவை கவிஞர் சல்மாவின் பெயர்கள் தான்.
பரவிய செய்தி
திமுக வேட்பாளர் பெயர் ரெக்கையா மாலிக் (எ) சல்மான்னு சொன்னாங்க இப்ப ராஜாத்தினு செய்தி குறிப்புல வருது. இதுலயும் ஊழலா... புளியஞ் சாதத்துல முட்டைய வச்சி பிரியாணினு ஏமாத்திட்டானுகளா...

விரிவான விளக்கம்
கடந்த மே 28ஆம் தேதியன்று திமுக தனது ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நடிகர் மற்றும் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவரான கமல் ஹாசன் உட்பட மூத் வழக்கறிஞர் வில்சன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவலிங்கம், எழுத்தாளர் சல்மா ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், ராஜ்ய சபா தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுகளில் செல்லத்தக்கவை நிராகரிக்கப்பட்டவை குறித்த அறிவிப்பை கடந்த ஜீன் 10ஆம் தேதி சட்டமன்ற பேரவை செயலகம் வெளியிட்டது. அதில் திருமதி. ராஜாத்தி என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.
வேட்பாளர் பட்டியலில் ரெக்கையா மாலிக் (எ) சல்மா என்று குறிப்பிட்டுவிட்டு தற்போது ராஜாத்தி என்று பெயரை மாற்றி திமுக ஊழல் செய்வதாக அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக வேட்பாளர் பெயர் ரெக்கையா மாலிக் (எ) சல்மான்னு சொன்னாங்க இப்ப ராஜாத்தினு செய்தி குறிப்புல வருது. இதுலயும் ஊழலா...
#தில்லுமுல்லு_திமுக @AIADMKITWINGOFL pic.twitter.com/F8GXmC8lBH
புளியஞ் சாதத்துல முட்டைய வச்சி பிரியாணினு ஏமாத்திட்டானுகளா...
உண்மை என்ன?
எழுத்தாளர் சல்மா குறித்து இணையத்தில் தேடியதில், அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை பார்க்க முடிந்தது. அதில் அவர் தன்னை 'ராஜாத்தி சல்மா' என்றே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேடியதில், 'The Hindu' செய்தித்தளத்தில் கவிஞர் சல்மா குறித்து எழுதப்பட்டிருந்த கட்டுரையை காணமுடிந்தது. அதில், 'ரெக்கையா மாலிக் என்பது சல்மாவிற்கு வீட்டில் வைத்த பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சல்மா பிறந்து வளர்ந்த சமூகத்தில் மரபுகள் என்று சொல்லப்படுவதை மீறும் வகையில் அவரது கவிதைகள் இருந்ததால் 'ராஜாத்தி' என்ற பெயரில் எழுதத் தொடங்கினார், பின்னர் சல்மா என்று மாற்றிக்கொண்டார் என்றும்' குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'மின்னம்பலம்' தளத்தில் வெளியான கட்டுரை ஒன்று சல்மாவின் எழுத்துலக வாழ்வை பற்றி குறிப்பிடுகிறது. அதில், 'சிறுமி ராஜாத்தி எப்படி தனது எழுத்துலக பயணத்தின் வழியே கவிஞர் சல்மாவாக மாறினார்' என்று விளக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, ரெக்கையா மாலிக், ராஜாத்தி ஆகிய பெயர்கள் கவிஞர் சல்மாவை குறிக்கக்கூடியவை தான் என்பது நிரூபணமாகிறது.
முடிவு:
ரெக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மாவிற்கு, ராஜாத்தி என்ற பெயரும் இருக்கிறது. இவையனைத்தும் ஒரே நபருடைய பெயர்கள் தான். இந்நிலையில், ‘சல்மா’ என்ற பெயரை ‘சல்மான்’ என்று தவறாக குறிப்பிடுவதோடு, திமுக ராஜ்ய சபா வேட்பாளர் பட்டியலில் ஊழல் செய்வதாக அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் தவறாக பரப்புகிறார்.