யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கான அபராதம் ரூ.100லிருந்து ரூ.1000 வரை உயர்த்தப்பட்டது, 2019 ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் தான்.
பரவிய செய்தி
Helmet போடவில்லை என்றால் ரூ.1000 அபராதம் ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு தனிநபரின் சராசரி வருமானம் 400 கூட இல்லை. இது மக்கள் மீதான அக்கறையாக தெரியவில்லை ,அரசுக்கு வருவாயை பெருக்க இதையும் ஒரு வழியாக பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. @chennaipolice_@ChennaiTraffic

விரிவான விளக்கம்
புதிய மோட்டார் வாகன குற்றங்கள் மற்றும் அக்குற்றங்களுக்கான அபராதங்கள் மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வெவ்வேறு குற்றங்களுக்கான அபராதங்கள் அடங்கிய பட்டியலைப் பதிவிட்டு, ’தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்குத் தமிழ்நாடு போக்குவரத்து போலீஸ் ரூ.1000 அபராதம் விதிக்கிறது. ஒரு நாளுக்குச் சராசரியாக ரூ.400 மட்டுமே வருமானம் பெரும் தமிழ்நாட்டு மக்களால் இதனை எப்படிச் செலுத்த முடியும்? இப்படி அதிக அபராதம் விதிப்பது மக்கள் மீதான அக்கறை காரணமாக அல்ல. இதனை வருமானத்திற்கான வழியாக அரசு பயன்படுத்துகிறது’ என்று ’பேசு தமிழா பேசு’ என்ற இணைய ஊடகத்தைச் சேர்ந்த மகாப்பிரபு என்பவர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்.
உண்மை என்ன:
தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கான அபராதமாக ரூ.1000 விதிக்கப்படுவது குறித்து இணையத்தில் தேடினோம். ‘THE NEW INDIAN EXPRESS’ செய்தித்தளத்தில் இதுகுறித்து ஒரு செய்தியைக் காணமுடிந்தது.

2019 ஆகஸ்ட் மாதம் வெளியான அந்த செய்தியில், ’புதிதாகத் திருத்தப்பட்டுள்ள மோட்டார் வாகனச் சட்டம் இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வரவிருப்பதால், தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்குச் சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் ரூ.1000 அபராதம் விதிக்கவிருப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டது குறித்து இணையத்தில் தேடியதில், ‘ஒன்றிய போக்குவரத்துத் துறையமைச்சர் நிதின் கட்கேரி கொண்டு வந்த மோட்டார் வாகனச் சட்டத்தின் மீதான திருத்தங்கள் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக’ குறிப்பிடும் 2019 ஜீலை மாதம் வெளியான செய்தியைக் காணமுடிந்தது.

இந்த மோட்டார் வாகன திருத்தச் சட்டம் (2019)-ன் படி, சாலை மற்றும் போக்குவரத்து சார்ந்த பல்வேறு குற்றங்களுக்கான அபராதங்கள் உயர்த்தப்பட்டது. அதில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கான அபராதம் ரூ.100லிருந்து ரூ.1000 வரை உயர்த்தப்படும், மேலும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கான அபராதம் ஒன்றிய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தில் இருந்துதான் கொண்டுவரப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்திருத்தம் (2019)-ன் படி தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கான அபராதம் ரூ.100லிருந்து ரூ.1000 வரை உயர்த்தப்பட்டது. இதனைத் திரித்து, தமிழ்நாடு வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தைத் தன்னிச்சையாக உயர்த்தியது போல் தவறாகப் பரப்பப்படுகிறது.