யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதலவரின் உரையை நேரலையில் ஒளிபரப்பும் போது தொழில்நுட்பக் கோளாரின் காரணமாக சில நொடிகள் விடுபட்டு இதுபோன்று ஒளிபரப்பாகியுள்ளது.
பரவிய செய்தி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS ஆ @mkstalin ???கூட்டணி கட்சி தலைவர் பெயர் கூட தெரியல உங்களுக்கு மக்கள் கஷ்டம் எங்க தெரிய போகுது #UnfitPolitician_Stalin

விரிவான விளக்கம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும் போது ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS அவர்களே’ என்று பேசுவது போன்ற வீடியோ அதிமுகவினரால் ’எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன:
பரப்பப்படும் வீடியோவை காணும் போது, இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதற்கான அடையாளத்தை காண்கிறோம். இதனை அடிப்படையாகக் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வமான ’எக்ஸ்’ கணக்கில் தேடிய போது, ”அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டப் பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்கிச் சிறப்புரை” என்ற தலைப்பில் Live வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

அந்த வீடியோவில், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS அவர்களே’ என்று பேசுவதாகவே இருக்கிறது.
ஆனால், இந்த சிறப்புரையின் பிற வீடியோக்களைக் தேடிய போது, பாலிமர் செய்தித் தொலைக்காட்சியின் யூட்யூப் பக்கத்தில் “தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை” என்ற தலைப்பில் இந்த உரையின் வீடியோ இருப்பதை காணமுடிந்தது.

2024 டிசம்பர் 6ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இந்த 36 நிமிட நீண்ட வீடியோவின் 2.04ஆவது நிமிடத்தில், ”விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எனது அருமை சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களே” என்றுதான் ஸ்டாலின் குறிப்பிடுகிறார். அதற்கு அடுத்து, ”தலைமைச் செயலாளர் முருகானந்தம் IAS அவர்களே” என்று குறிப்பிடுகிறார்.
இதிலிருந்து, முதலவரின் உரையை நேரலையில் ஒளிபரப்பும் போது தொழில்நுட்பக் கோளாரின் காரணமாக சில நொடிகள் விடுபட்டு ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முருகானந்தம் IAS அவர்களே’ என்று ஒளிபரப்பாகியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
முடிவு:
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சிறப்புரை, நேரலையில் ஒளிப்பரப்பாகும் போது சில நொடிகள் விடுப்பட்டுள்ளது. அதனைத் திரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என்று முதல்வர் முருகானந்தம் IAS-ஐ குறிப்பிட்டார் என்று தவறாக பரப்புகின்றனர்.