YouTurn

கொரோனா வைரசைக் குணப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிப்பா ?| உண்மை என்ன ?

கொரோனா வைரசைக் குணப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிப்பா ?| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெறும் 3 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் தடுப்பு ஊசியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக...

பரவிய செய்தி

அனைவருக்கும் ஒரு சந்தோஷம் தரும் செய்தி. கோரோணாவுக்கு வாக்சின் மருந்து கண்டுபிடிச்சிட்டங்க. இன்ஜெக்ஷன் கொடுத்த 3 மணி நேரத்தில் குணமாகும்.

விரிவான விளக்கம்

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெறும் 3 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் தடுப்பு ஊசியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.



வாட்ஸ் அப்பில் பரவி வரும் செய்தியில், இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் COVID-19 வைரசிற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளதாக சில புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன. இந்த தகவல் தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பிற மொழிகளில் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி இருக்கிறது. மேலும், ஃபாலோயர்கள் தரப்பில் ஃபார்வர்டு செய்தியின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

இஸ்ரேல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களே தவிர இன்னும் முழுமை அடையவில்லை. நோவல் கொரோனா  தடுப்பூசி மருந்தினை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து உள்ளனர்.

2020 பிப்ரவரி 27-ம் தேதி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் அறிக்கையில், " MIGAL ஆராய்ச்சியாளர்கள் பறவைகளுக்கான கொரோனா வைரஸ் மூச்சுக்குழாய் அழற்சி வைரசிற்கு (IBV) எதிராக ஒரு சிறந்த தடுப்பூசியை மேம்படுத்தி வருகின்றனர். இது விரைவில் கோவிட்-19 க்கு எதிரான மனித தடுப்பூசியாக உருவாக்கப்படும் " என வெளியாகி இருக்கிறது.



மார்ச் 12-ம் தேதி வெளியான செய்தியில், இஸ்ரேல் நாட்டின் ஊடகத்தின் தகவலின் படி புதிய கொரோனா வைரஸ் கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை மேம்படுத்தும் முயற்சிகள் முழுமையடையும் என வரும் நாட்களில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை மேம்படுத்தும் முயற்சியிலேயே உள்ளனர்.

இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாக வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தடுப்பூசி மருந்தின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் shutterstock புகைப்பட இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.



கொரோனா வைரஸ் என்பது ஓர் வைரஸ் குடும்பத்தின் பெயர். அதில், பல வைரஸ்கள் இடம்பெற்று இருக்கின்றன. தற்பொழுது பரவி வரும் நோவல் கொரோனா வைரஸ் கோவிட்-19 (GOVID-19) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முகநூல் வைரல் வீடியோ : 



Facebook link | archived link

நோவல் கொரோனா வைரசை 3 மணி நேரத்தில் குணப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளதாக முகநூலில் வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்து பார்த்தோம். வைரலாகும் வீடியோவின் மேலே " San Diego Lab Discovers COVID-19 Vaccine in 3 hours " எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. சான் டியாகோ ஆராய்ச்சி கூடம் கோவிட்-19 தடுப்பூசியை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்ததாக கூறியதை, 3 மணி நேரத்தில் குணப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடித்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்.

சரி, சான் டியாகோ ஆராய்ச்சி கூடம் கோவிட்-19 தடுப்பூசியை கண்டுபிடித்ததா என ஆராய்ந்து பார்க்கையில், பிப்ரவரி 11-ம் தேதி Cbs8 என்ற இணையதளத்தில் " San Diego lab discovers COVID-19 vaccine in 3 hours " என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருக்கிறது. வைரலாகும் வீடியோவில் இருக்கும் ஆராய்ச்சி கூடத்தின் காட்சிகளும் இங்கு இடம்பெற்று இருக்கின்றன. 

சான் டியாகோவைச் சேர்ந்த " Inovio Pharmaceuticals " ஆராய்ச்சி கூடம் 3 மணி நேரத்தில் கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளதாகவும், அதனை மனிதர்களுக்கு சோதித்து பார்க்க ஏப்ரல் மாதம் வரை நேரம் எடுக்கலாம் எனக் கூறிக் கொள்வதாக Cbsnews மற்றும் san diego union tribune ஆகிய செய்தி தளங்களில் வெளியாகி இருக்கிறது.

உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் கேள்வி பதிலில், கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி மற்றும் சிகிச்சை குறித்து கேட்கப்பட்டு இருக்கும் கேள்வியில், கோவிட்-19க்கு எதிரான எந்தவொரு தடுப்பூசி மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் தற்போது வரை இல்லை என்றேக் கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

நம்முடைய தேடலில், கோவிட்-19 வைரசுக்கு எதிரான தடுப்பூசியை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து விட்டதாகவும், 3 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பை குணப்படுத்தும் என பரவும் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை உருவாக்கவும், மேம்படுத்தும் முயற்சியிலேயே ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…