YouTurn

பெட்ரோல் மீதான வரி உயர்வை முன்வைத்து தமிழ்நாடு பற்றி பரப்பப்படும் கருத்துகள்!

பெட்ரோல் மீதான வரி உயர்வை முன்வைத்து தமிழ்நாடு பற்றி பரப்பப்படும் கருத்துகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு குறித்து பரப்பப்படும் இந்த கருத்துகளும் தகவல்களும் திரிக்கப்பட்டவை, தவறானவை.

பரவிய செய்தி

அடபாவிகளா, ஒரு 200 ரூபாய் உடன்பிறப்பின் வாழ்க்கை மிகவும் கடினம்

image.png


Link / Archive Link


ஒரு லிட்டர் பெட்ரோல்க்கு 22+ ரூபாய் வரி வசூலிக்கும் தமிழக அரசு


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தியது. 2 ரூபாய் உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மீதான கலால் வரி 13 ரூபாயாக அதிகரித்தது. இந்த வரி உயர்வு ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகவும் அறிக்கப்பட்டது.

இந்நிலையில், ’கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் விலை உயரும் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது. ஒன்றிய அரசைவிட தமிழ்நாடு மாநில அரசு பெட்ரோல் மீது அதிக வரி விதித்திருக்கிறது” என்று பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. மேலும், சமூக வலைதளமான ’எக்ஸ்’ அறிமுகப்படுத்திய 'Grok' செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி 13 ரூபாய் மட்டுமே என்று சொல்வதை ஆதாரமாக காட்டுப்படுகிறது.


உண்மை என்ன?


முதலில், பெட்ரோலின் நுகர்வோர் விலையில் (Retail Price) ஒன்றிய அரசின் வரி 13 ரூபாய் மட்டுமே என்றும் தமிழ்நாடு மாநில அரசு 22 ரூபாய்க்கும் மேலாக வரி விதிப்பதாகவும் சொல்லப்படுவது குறித்து ஆய்வு செய்தோம்.


'Indian Oil Corporation Limited' இணையதளத்தில் உள்ள தகவலின் படி பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி 21.90 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தகவல் டெல்லி ஒன்றிய பிரதேசத்திற்கானது என்ற போதிலும், மத்திய அரசின் வரி அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கும் ஒரே போலவே இருக்கும். 'Grok' பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி 13 ரூபாய் மட்டுமே என்று சொல்வது உண்மையான தகவல் இல்லை. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) சொல்வது எல்லாமே உண்மை என்று நம்பும் தவறான போக்கு இங்கே நிலவுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) தவறான தகவலை கொடுப்பதற்காக வாய்ப்புகள் இருப்பதைப் பற்றி நமது ’YouTurn’ ஏற்கனவே எழுதியுள்ளோம்.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள படம் ஒன்றிய அரசின் Petroleum Planning & Analysis Cell இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் Central Excise என்று குறிப்பிட்டு, Basic Excise Duty ரூ.1.40/லி, Special additional Excise Duty ரூ.13.00/லி, Agriculture Infrastructure & Developement Cess ரூ.2.50/லி, Additional Excise duty(Road and Infrastructure Cess) ரூ.5.00/லி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக Central Excise duty என்பது ரூ.21.90/லி என்பதே உண்மை.

image.png

மேலும் தமிழ்நாடு அரசு விதிக்கும் வரி 15% + 13.02 பைசா என்று குறிப்பிட்டிருப்பதும் தவறான தகவலாகும். தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீது விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (VAT) 13% + ரூ.11.52/லி.


பெட்ரோலின் அடிப்படை விலை 53.08 ரூபாய், அதனுடன் ஒன்றிய அரசு விதிக்கும் வரி 21.90. ஆக மொத்தம் 74.98 ரூபாய் ஆகும். இதில் 13% என்பது 9.75 ஆகும். அதனுடன் கூடுதல் வரியாக 11.52 ரூபாய் விதிக்கப்படுகிறது. 9.75 + 11.52 = 21.27 ரூபாய் ஆகும். எனவே பெட்ரோல் மீது மாநில அரசு விதிக்கும் வரியும் ஒன்றிய அரசு விதிக்கும் வரியும் கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் உள்ளது. 



இதனை திரித்து ஒன்றிய அரசு பெட்ரோலுக்கு 13 ரூபாய் மட்டுமே வரி விதிப்பதாகவும், தமிழ்நாடு மாநில அரசு 22 ரூபாய்க்கும் மேல் வரி விதிப்பதாகவும் தவறாக பரப்பப்படுகிறது. 


பாஜக ஆளும் மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது என்று சொல்லபடுவது குறித்து தேடினோம். ‘Economic Times’ தளத்தில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை பற்றி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் விலை 106.62 ரூபாய், மகாராஷ்ட்ராவில் 103.50 ரூபாயாக உள்ளது. மேலும், பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் பீகாரில் 105.58 ரூபாயாகவும் ஆந்திர பிரதேசத்தில் 108.35 ரூபாயாகவும் உள்ளது. 



இதனை மறைத்துவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாநிலங்களை மட்டும் பட்டியலிட்டு பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாகவும் திரித்துப் பரப்பப்படுகிறது. 


மேலும், பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தியும் மாநிலங்களில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று பரப்பப்படுகிறது. 


ஆனால் உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வரும் நிலையில் இந்த கலால் வரி உயர்வை ஒன்றிய அரசு செய்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். கடந்த நான்காண்டுகளில் மிகக் குறைந்த விலையை எட்டியுள்ளது கச்சா எண்ணெய். இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வரும் நிலையில், நுகர்வோருக்கான பெட்ரோல் விலையை குறைக்காமல், அதன் மீது கலால் வரியை அதிகரித்திருக்கிறது ஒன்றிய அரசு. கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருப்பதால் தான் இந்த வரி உயர்வால் இன்னும் பெட்ரோல் விலை உயரவில்லை. 


ஆனால்  கச்சா எண்ணெய்யின் விலை வருங்காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் போது பெட்ரோலின் விலை அதிகரிக்கும். ஏனென்றால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனை கணக்கில் கொண்டுதான் மக்களும் அரசியல் இயக்கங்களும் இந்த வரி உயர்வை கண்டிக்கிறார்கள். 


இதிலிருந்து பெட்ரோல் விலை உயர்வதாக அரசியல் கட்சிகளால் மக்களிடம் ஏற்படுத்தப்படும் அச்சம் அரசியல் நோக்கம் கொண்டது என்று பரப்பப்படுவது தவறான கருத்தாகும். 


முடிவு:


பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தியதை தொடர்ந்து,  பாஜக ஆதரவாளரால் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு குறித்து பரப்பப்படும் மேற்கூறிய கருத்துகளும் தகவல்களும் திரிக்கப்பட்டவையாகவும், தவறானதாகவும் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.