யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வெங்காயம் உண்டுவிட்டு தொழுகைக்கு வரவேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளதை திரித்து பிரியாணி, மசாலா பொருட்கள், அசைவ உணவு ஆகியவற்றை உண்டுவிட்டு தொழுகை செய்ய வரக்கூடாது என்று நபிகள் நாயகம் சொன்னதாக தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
வெங்காயம் சாப்பிட்டவர்கள் அந்த வெங்காயம் ஜீரணமாகி வெளியேறும் வரையில் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமியர்கள் அசைவம், பிரியாணி, மசாலா பொருட்கள் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு தொழுகைக்கு வர வேண்டாம் என்றும் நபிகள் கூறியுள்ளார் - அரசியல் விமர்சகர் தேவபிரியா.
விரிவான விளக்கம்
தாமரை டிவி என்ற யூடியூப் தளத்தில் அரசியல் விமர்சகர் தேவபிரியா என்பவரின் நேர்காணல் ஒன்று கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 31 நிமிடங்கள் நீண்ட அந்த நேர்காணலில் அவர் பேசும் போது, "வெங்காயம் சாப்பிட்டவர்கள் அந்த வெங்காயம் ஜீரணமாகி வெளியேறும் வரையில் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம் என்று நபிகள் நாயகம் சொன்னதாகவும், மேலும் இஸ்லாமியர்கள் அசைவம், பிரியாணி, மசாலா பொருட்கள் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு தொழுகைக்கு வர வேண்டாம் என்ற சொன்னதாகவும் நபிகள் சொன்னதாகவும்" குறிப்பிடுகிறார்.
உண்மை என்ன?
'இஸ்லாமிய மதத்தில் வெங்காயம் உண்பது பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது' என்று இணையத்தில் தேடியபோது, 'இஸ்லாம் கல்வி' என்ற வலைத்தளத்தில் இது பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை காண்கிறோம்.
அதில் ‘வெள்ளைப்பூண்டு வெங்காயம் உண்பது பற்றி’ என்ற தலைப்பின் கீழ் உள்ள, 331ஆவது வாசகத்தில், "யார் இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம் என்று கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் "புஹாரி-853: இப்னு உமர் (ரலி)" என்ற உப தலைப்பின் கீழ் உள்ள 332ஆவது வாசகத்தில் "ஒரு மனிதர் அனஸ் (ரலி) இடம் வெங்காயம் பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) யார் அந்தச் செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறாரோ அவர் நம்மை நெருங்க வேண்டாம் அல்லது நம்முடன் தொழ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெங்காயம் சாப்பிட்டுவிட்டு பள்ளி வாசலுக்கு வரவேண்டாம் என்று நபிகள் நாயகம் சொன்னது உண்மைதான்.
ஆனால் அசைவம், மசாலா பொருட்கள், பிரியாணி போன்ற உணவுகளை உண்டுவிட்டு தொழுகை செய்ய வரவேண்டாம் என்று நபிகள் சொன்னதாக இதில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
இதிலிருந்து, வெங்காயம் உண்டுவிட்டு தொழுகைக்கு வரவேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளதை திரித்து பிரியாணி, மசாலா பொருட்கள், அசைவ உணவு ஆகியவற்றை உண்டுவிட்டு தொழுகை செய்ய வரக்கூடாது என்று நபிகள் நாயகம் சொன்னதாக நேர்காணலில் தவறாக கூறப்பட்டுள்ளது நிரூபணமாகிறது.
முடிவு:
இஸ்லாமிய மத நூலில் வெங்காயம் உண்டுவிட்டு தொழுகை செய்ய வரவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதை திரித்து, அசைவ உணவு, பிரியாணி, மசாலா பொருட்கள் ஆகியவற்றை உண்டுவிட்டு தொழுகை செய்ய வரக்கூடாது என்று தவறாக கூறுகிறார் தேவபிரியா என்பவர்.