யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. பேராலயத்தின் நிகழ்ச்சி என்பதால் பாதிரியார் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார்.
பரவிய செய்தி
மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி, மாநில அமைச்சராக இருந்தாலும் சரி, மாவட்ட SP-யாக இருந்தாலும் சரி... அனைவரும் கிறிஸ்தவ மத போதகருக்கு பிறகு தான்...
இடம்: தூத்துக்குடி மாவட்டம்... தமிழகம் எங்கே போகிறது சிந்திப்பீர்!!

விரிவான விளக்கம்
காவல் சீருடை அணிந்த அதிகாரி உட்பட பிற அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், சூழ்ந்திருக்க பாதிரியார் உடையில் இருக்கும் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு, ”மாவட்ட ஆட்சியர், மாநில அமைச்சர், மாவட்ட SP ஆகியோர் இருந்தாலும் கிறிஸ்தவ மத போதகருக்கு தான் முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது” என்று சமூக வலைத்தளத்தில் பாஜகவைச் சேர்ந்தவரால் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் தேடிய போது, தமிழ்நாட்டின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனின் அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ தளத்தில் இந்த புகைப்படத்தை காணமுடிந்தது.

கடந்த ஜூலை 26ஆம் தேதி எழுதப்பட்டுள்ள இந்த ‘எக்ஸ்’ தளப் பதிவில், “தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது” இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தில் தேடியதில், ’News 7 தமிழ்’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், “கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதியன்று, உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 443வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள கொடிமரத்தின் படம் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள புகைப்படத்துடன் ஒத்துப்போவதாகவும் இருக்கிறது.

கூடுதலாக, பாதிரியார் ஒருவர் செய்தியாளர் சந்திப்பை எதிர்கொண்டு பேசும் அந்தப் புகைப்படத்தின் பின்னணியில் மாதா உருவப்படம் இருப்பதைக் காணமுடிகிறது. இதிலிருந்து, இந்த புகைப்படம் பனிமயமாதா பேராலயத்தின் திருவிழா அன்று பேராலயத்தின் வாளகத்திற்குள் எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.
முடிவு:
பரப்பப்படும் இந்த புகைப்படம் அரசு முறை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டதல்ல. தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்றத்தின் போது எடுக்கப்பட்டதாகும். பேராலயத்தின் நிகழ்ச்சி என்பதால் பாதிரியார் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை திரித்து, பொது நிகழ்வில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளைவிட கிறிஸ்துவ மத போதகருக்கு அதிக முக்கியத்துவ அளிக்கப்படுவதாக மதவாத கண்ணோட்டத்துடன் தவறாக பரப்புகிறார்கள்.